Ad Code

Responsive Advertisement

வேலைப்பளு இடையே மன அமைதி பெற 5 வழிகள்!




"முன்னெல்லாம் மாடிக்கு சென்றால் ஐந்து நிமிடமாவது சும்மா வானத்தை பார்த்து ரசிப்பேன். வீட்டின் ஓரத்தில் பூத்திருக்கும் ஒரு சிறிய பூ கூடப் பார்ப்பதற்கு அழகாக தெரியும். ஆனால் இப்போது? காலையில் எழுந்தால் அலுவலகத்திற்கு ஓட்டம், இரவில் வந்தால் தூக்கம்...நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குக்கூட நேரம் இல்லை" இந்த எண்ணம் உங்களுக்கும் என்றாவது தோன்றியது உண்டா?

நம்மில் பலருக்கு இன்று இருக்கும் ஒரே புலம்பல், "எல்லாவற்றிற்கும் இந்த வேலைதான் காரணம். வேலைக்கு நடுவே எனக்கென்று நேரம் ஒதுக்க எங்கே நேரம் இருக்கிறது?" என்பதுதான். ஆனால், உண்மையிலேயே எல்லாவற்றிற்கும் வேலையை மட்டுமே குறை சொல்ல முடியுமா?

கொஞ்சம் யோசித்து பாருங்கள்...இயற்கையை ரசிக்க வேண்டும், மனதை லேசாக மாற்றி கொள்ள வேண்டும் என்றால் நாம் பெரிய அளவில் விடுமுறை எடுத்துக்கொண்டு கொடைக்கானலுக்கும் ஊட்டிக்கும் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. நம் வீட்டு வாசலில் நிற்கும் ஒரு மரம், பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு சிறிய பூங்கா, ஏன்...அலுவலகத்தின் ஜன்னல் வழியே தெரியும் சிறிய வானம் கூடப் போதுமானது.

நாம்தான் 'நேரமில்லை' என்ற காரணத்தை கூறி, நம்மை சுற்றி இருக்கும் சிறிய சந்தோஷங்களை தவறவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். இப்படியிருக்க, உங்களுக்கு உதவுவதற்காக இந்த பரபரப்பான ஓட்டத்திலும் இயற்கையோடு இணைந்து வாழ சில டிப்ஸ்களை கொண்டுவந்திருக்கிறோம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இயற்கை தரும் நன்மைகள்

நாம் பல நேரங்களில் "இயற்கையோடு நேரத்தை செலவிட வேண்டும்" என்று நினைத்தவுடனேயே பெரிய திட்டங்களை தீட்டுகிறோம். "அடுத்த மாதம் ஏதேனும் ஒரு மலைப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டும்" என்று பெரியதாக யோசித்தே, இறுதியில் எங்குமே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகிறோம்.

ஆனால் டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழும் மக்களின் அணுகுமுறை வேறு விதமாக உள்ளது. அவர்கள் இயற்கையை தேடி மைல் கணக்கில் பயணம் செய்வதில்லை. மாறாக, தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இயற்கையை கொண்டு வந்துவிடுகிறார்கள்.

மதிய உணவு நேரங்களில் அலுவலகத்திற்குள்ளேயே அமராமல், வெளியில் இருக்கும் மரத்தடி நிழலில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.

வீட்டிற்கு திரும்பும்போது வாகன நெரிசல் மிகுந்த சாலையை தவிர்த்து, மரங்கள் அடர்ந்த பாதையை தேர்ந்தெடுத்து நடந்து செல்வார்கள்.

இயற்கை என்பது எப்போதாவது சென்று பார்க்கும் ஒரு பொருளோ அல்லது இடமோ அல்ல. அது நம் வாழ்வின் ஒரு பகுதி என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

மன அமைதிக்கு 10 நிமிடங்கள் போதும்

அலுவலகத்தில் தொடர்ச்சியாக வேலை பார்த்து மன அழுத்தம் கூடும்போது, ஒரு 10 நிமிடம் கைபேசியை உள்ளேயே வைத்துவிட்டு வெளியில் வந்து பாருங்கள். மரத்து கிளையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய குருவியின் ஒலி, லேசாக வீசும் வெளிக்காற்று, இது தரும் அமைதியை வேறு எதுவாலும் தர முடியாது.

வெளிநாடுகளில் மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்க 'சிகிச்சைப் பூங்காக்கள்' (Therapy Gardens) என்று தனியாகவே உருவாக்கியிருக்கிறார்கள். பூங்காவில் இருக்கும் ஒரு பெஞ்சில் 10 நிமிடம் அமர்ந்து பறவைகளின் ஒலியைக் கேட்டாலே, மூளையில் இருக்கும் பதற்றம் குறைந்து மனம் அமைதியடைகிறது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

வேலைக்கு நடுவே இயற்கையை ரசிக்க 5 எளிய வழிகள்

பெரிய திட்டமிடுதல்கள் எதுவும் இல்லாமல், உங்களது வழக்கமான நாட்களிலேயே இதை எவ்வாறு செய்வது? சில எளிய ஆலோசனைகள் இதோ...

மதிய உணவை வெளியில் உண்ணுங்கள்: 

அலுவலகத்தில் உணவு இடைவேளை கிடைத்ததும், கைபேசியை பார்த்துக்கொண்டே சாப்பிடாமல், வெளியில் இருக்கும் மரத்தடி நிழலிலோ அல்லது மொட்டை மாடியிலோ சென்று சாப்பிடுங்கள்.

இயற்கை நிறைந்த பாதை: 

வீட்டிற்கு திரும்பும்போது அல்லது அலுவலகத்திற்கு செல்லும்போது, சாத்தியப்பட்டால் மரங்கள் நிறைந்த அமைதியான பாதையை தேர்ந்தெடுத்து நடந்து பாருங்கள்.

10 நிமிட இடைவேளை: 

வேலையின் நடுவே ஒரு 10 நிமிடம் கைபேசியை பயன்படுத்தாமல், வெளியில் வந்து இயல்பாக காற்றை சுவாசியுங்கள். சுற்றியுள்ள மனிதர்களையும் மரங்களையும் கவனிப்பது மனதை லேசாக்கும்.

நடந்துகொண்டே பேசுங்கள்: 

சக ஊழியர்களுடன் பேச வேண்டிய சாதாரண விஷயங்களை மூடிய அறைக்குள் பேசாமல், வெளியில் நடந்துகொண்டே பேசுங்கள்.

சிறிய பழக்கங்கள்: 

வாரத்தில் ஒருநாளாவது வீட்டில் ஒரு புதிய செடியை நட்டு வைப்பது அல்லது பூங்காவில் சற்று நேரம் உலாவுவது போன்றவற்றை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement