வருமானத்தை மறைத்ததாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் நடிகர் விஜய் வீட்டில் நடத்திய வருமான வரி சோதனையில், புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததை வருமான வரித் துறையினர் கண்டறிந்தனர். அதற்காக, விஜய்க்கு வருமான வரித்துறை 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித் துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யபட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருமான வரித்துறை சோதனைகளின் போது பெறப்பட்ட ஆவணங்கள், விஜயின் வாக்குமூலம், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட கோரியும், கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கு தேவையான முகாந்திரம் உள்ளதா? என்பதை ஆராய்வதற்காக, அந்த ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு மீதான பரிசீலனைக்கு நீண்ட நாட்களாக எண்ணிடாத உயர்நீதிமன்ற பதிவுத்துறை, வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என முடிவு செய்ய தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, "ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக எண்ணிடும் பணியை முடிக்காமல் இருக்க கூடாது.
தவெக தலைவர் விஜய்க்கு எதிரான இந்த மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு உகந்ததா? என்ற தலைப்பில், சம்மந்தப்பட்ட நீதிபதியின் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்" என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி அமர்வு உத்தரவின்படி, தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுக்க ஏதுவாக இன்று எண்ணிடப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படகிறது.

0 Comments