குழந்தை இருக்கும் வீடுகளில் பொதுவாகவே அலமாரிகளில் விதவிதமான சிரப் பாட்டில்கள் அணிவகுத்து நிற்பதை நாம் பார்த்திருப்போம். காய்ச்சல், சளி, இருமல் என ஒவ்வொன்றுக்கும் ஒரு டானிக் இருக்கும். மறுபுறம், வீட்டில் இருக்கும் பெரியவர்களை பார்த்தால் அவர்கள் தங்களுக்கு தேவையான மாத்திரைகளை ஒரு டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள்.
குழந்தைகளுடன் வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால், முதலில் அந்த மருந்து பாட்டில்களை பத்திரமாக எடுத்து வைப்பதே பெற்றோருக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால், ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், குழந்தைகளால் மாத்திரைகளை விழுங்க முடியும் என்றாலும், ஏன் மருத்துவர்கள் இன்னும் சிரப் வகைகளையே அதிகம் பரிந்துரைக்கிறார்கள்?
திரவ மருந்துகளில் இருக்கும் சவால்கள்
பொதுவாக குழந்தைகளுக்கு சிரப் கொடுப்பதுதான் பாதுகாப்பானது மற்றும் எளிதானது என்ற ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், நடைமுறையில் இது பல சிக்கல்களை உருவாக்குகிறது. ஒரு குழந்தைக்கு சிரப் பரிந்துரைக்கப்படும் போது இதில் அதிக பாதிப்பு அடைவது பெற்றோர்கள் தான்.
காலை, மதியம், இரவு என டானிக் கொடுக்க பரிந்துரைக்கப்படும் போது, அதனை குழந்தைகளுக்கு கொடுப்பது சவாலான காரியம். சரியான அளவில் எடுத்து குழந்தைக்கு கொடுத்தாலும், அதில் பாதியை குழந்தைகள் துப்பி விடுகின்றனர். இதனால், குழந்தைக்கு பரிந்துரைக்கப்படும் அளவு உள்ளே சென்றதா? என்று கேட்டால் சந்தேகம் தான்.
திரவ மருந்துகள் ஏன் சிக்கலானவை?
குழந்தைகள் திரவ மருந்துகளை முழுமையாக விழுங்காமல் துப்புவதற்கோ அல்லது பிடிவாதமாக மறுப்பதற்கோ வாய்ப்புகள் அதிகம். அழும் அல்லது அடம் பிடிக்கும் குழந்தைக்கு சரியான அளவில் மருந்தை அளந்து கொடுப்பது மிகவும் கடினம்.
மேலும், திரவ மருந்துகள் விரைவில் கெட்டுப்போக கூடியவை. பல வீடுகளில் டானிக் பாட்டில்கள் பல ஆண்டுகளாக அதே அலமாரியில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். மாத்திரைகளை விட, திரவ மருந்துகள் பொதுவாக மிக அதிக அளவிலான கார்பன் தடம் (carbon footprint) கொண்டவையாக உள்ளன என BMJ ஆய்வுதளத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரையில் தெரியவந்துள்ளது. இத்தகைய காரணங்களால், மருத்துவர் பரிந்துரைத்த முழு கால அளவிற்கும் மருந்தை கொடுத்து முடிக்க முடியாமல் போகிறது.
இப்படி மருந்தை பாதியிலேயே நிறுத்துவது அல்லது சரியான அளவில் கொடுக்காமல் விடுவது ஆபத்தானது. இது நோயின் தீவிரத்தை குறைப்பதற்கு பதிலாக, பாக்டீரியாக்கள் அந்த மருந்துக்கு எதிராக தற்காப்பு திறனை பெற (Antibiotic Resistance) வழிவகுக்கும். இதனால் குழந்தை குணமடைய நீண்ட காலம் எடுக்கும் அல்லது மீண்டும் மீண்டும் மருத்துவரிடம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
மாத்திரைகளின் நன்மைகள்!
சமீபத்திய ஆய்வுகளின்படி, குழந்தைகளுக்குத் சிரப் பதிலாக மாத்திரைகளை ஊக்குவிப்பது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. டானிக் மாத்திரைகளை விட விலை அதிகமானவை. மருத்துவர் பரிந்துரைக்கும் சிரப்புகளில், மூன்றில் இரண்டு பங்கை மாத்திரைகளாகவோ அல்லது கேப்சூல்களாகவோ வாங்கினால், மருந்து செலவில் முக்கால்வாசி பணத்தை சேமிக்க முடியும் என Solid oral forms availability in children: a cost saving investigation என்ற தலைப்பில் வெளியான NIH ஆய்வு கூறுகிறது.
சிரப் மருந்தை விட சிறிய மாத்திரைகளை (mini-tablets) குழந்தைகள் எளிதாக ஏற்றுக்கொண்டதாக 306 குழந்தைகளிடம் நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு Favorable acceptance of mini-tablets compared with syrup: a randomized controlled trial in infants and preschool children என்ற தலைப்பில் NIH ஆய்வு தளத்தில் வெளியாகியுள்ளது.
பொருளாதாரம் மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கும் திரவ மருந்துகள் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. திரவ மருந்துகளைத் தயாரிக்கவும், பேக்கிங் செய்யவும், எடுத்து செல்லவும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அவற்றின் எடை அதிகம் என்பதால் போக்குவரத்தின் போது வெளியேறும் கார்பன் அளவும் அதிகம். ஆனால் மாத்திரைகள் எடைகுறைவானவை மற்றும் கையாள்வதற்கு எளிதானவை.
குழந்தைகளால் மாத்திரையை விழுங்க முடியுமா?
குழந்தைகளால் மாத்திரையை விழுங்க முடியாது என்ற எண்ணம் பெற்றோரிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால், நான்கு வயது முதலே குழந்தைகளுக்கு சரியான பயிற்சியளித்தால் அவர்களால் பாதுகாப்பாக மாத்திரைகளை விழுங்க முடியும் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ வழிகாட்டுதல்களும் இதையே பரிந்துரைக்கின்றன. மாத்திரைகள் மலிவானவை, சேமித்து வைக்க எளிதானவை மற்றும் துல்லியமான அளவு கொண்டவை. இவ்வளவு நன்மைகள் இருந்தும், இன்னும் திரவ மருந்துகளே முதன்மையாக இருப்பதற்கு பழமைவாத கொள்கைகளே காரணம் என்கிறது ஆய்வு. மாத்திரையை பார்த்தால் குழந்தைகளுக்குப் பயம் வரும் அல்லது தொண்டையில் சிக்கிக்கொள்ளும் எனப் பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்.
குழந்தையை எப்படி பழக்குவது?
முதலில், மாத்திரையை சிறியதாக உடைத்து, அவர்களுக்கு பிடித்த ஜூஸ் அல்லது தண்ணீரை கொடுத்து விழுங்க சொல்லுங்கள். பழகியதும், மாத்திரையை உடைக்காமல் கொடுக்கலாம். நிச்சயமாக கைக்குழந்தைகளுக்கும், விழுங்குவதில் சிக்கல் உள்ள குழந்தைகளுக்கும் சிரப், டானிக் தேவைப்படும். ஆனால், அனைத்து குழந்தைகளுக்கும் திரவ மருந்துதான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

0 Comments