Ad Code

Responsive Advertisement

"April Fool, ஏமாந்த Fool"... வரலாறு தெரியுமா?




பள்ளிப் பருவத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வந்து விட்டாலே போதும், மனதில் ஒரு தனி குஷி பிறந்து விடும். அன்றைய நாள் முழுவதும் நம்முடைய ஒரே குறிக்கோள் யாரையாவது ஒருவரை 'முட்டாள்' ஆக்கி விட வேண்டும் என்பது தான். காலையில் கண் விழித்ததிலிருந்தே திட்டங்கள் தீட்ட ஆரம்பித்துவிடுவோம்.

"ஏய்! உன் சட்டைக்குப் பின்னாடி ஏதோ ஒட்டிட்டு இருக்கு பாரு!", "ஐயோ! உன் தலை மேல பல்லி விழுந்துருச்சு!", "என்னை மன்னிச்சிரு, தெரியாம உன் பேனாவை உடைச்சுட்டேன்" என சக மாணவர்களை பயமுறுத்தி விட்டு, அவர்கள் பதறுவதை பார்த்து "ஏப்ரல் ஃபூல்... ஏமாந்த ஃபூல்"! என்று கத்தி சிரிப்பதில் இருக்கும் அந்த ஆனந்தமே தனி.

அப்படியே கொஞ்சம் வீட்டின் பக்கம் வந்தால், "அம்மா! கீழ விழுந்து ரத்தம் வருது பாரு!" என அம்மாவிடம் நடிப்பதும், அவர் பதறிக் கொண்டு ஓடி வரும் போது சிரித்து காட்டிக் கிண்டல் செய்வதும் நம்மில் பலருடைய மறக்க முடியாத நினைவுகள். ஆனால், இப்போது காலச்சக்கரம் ஓடி கொண்டே இருக்கிறது.

இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்க்கையில், இன்று என்ன தேதி? என்ன கிழமை என்பதை கூடத் தெரிந்து கொள்ள முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படியே தெரிந்தாலும், பழையது போல மற்றவர்களை சீண்டிப் பார்த்து விளையாடும் அந்த பால்ய மனநிலை நம்மிடம் இப்போது இல்லை. உண்மையில், மற்றவர்களை காயப்படுத்தாமல் சிறிது நேரம் சிரித்து மகிழ்வதற்காகவே இப்படி ஒரு நாள் ஒதுக்கப்பட்டது.

ஆனால், எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? எதற்காக உலகமே ஏப்ரல் ஒன்றாம் தேதியை இப்படி ஒரு தினமாகக் கொண்டாடுகிறது? இதன் பின்னால் இருக்கும் உண்மையான வரலாறு என்ன என்று? வாருங்கள், கொஞ்சம் பின்னோக்கி போய் பார்க்கலாம்.

காலண்டர் மாற்றத்தால் வந்த 'முட்டாள்கள்'

ஏப்ரல் முட்டாள்கள் தினம் உருவானதற்கு பின்னால் சொல்லப்படும் மிகவும் பிரபலமான கதை 1582-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. அந்த காலத்தில் பிரான்ஸ் நாட்டில் 'ஜூலியன் காலண்டர்' (Julian Calendar) வழக்கத்தில் இருந்தது. அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதிதான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ஆனால், போப் கிரிகோரி (Pope Gregory XIII) புதிய 'கிரிகோரியன் காலண்டரை' அறிமுகப்படுத்திய போது, புத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

அந்த காலத்தில் இன்று இருப்பது போல சமூக வலைதளங்களோ, வேகமான தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. அதனால் இந்த செய்தி பல ஊர்களுக்கு சென்றடைய நீண்ட காலம் எடுத்தது. தகவல் தெரிந்த பிறகும் கூட, சில பழமைவாதிகள் மாற்றத்தை ஏற்காமல் ஏப்ரல் ஒன்றையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.

புதிய காலண்டரை பின்பற்ற தொடங்கிய மக்கள், பழைய முறையை பின்பற்றுபவர்களை கேலி செய்ய தொடங்கினார்கள். அவர்களுக்கு பின்னால் காகிதத்தில் செய்த மீன் உருவத்தை ஒட்டி வைத்து விளையாடினார்கள். இப்படி தான் 'ஏப்ரல் ஃபூல்' என்ற வழக்கம் மெல்ல மெல்ல தொடங்கியது என்று வரலாறு கூறுகிறது.

ரோமானியர்களின் 'ஹிலாரியா' விழா

மறுபுறம், இந்த தினத்திற்கு பின்னால் பண்டைய ரோமானியர்களின் கலாச்சாரமும் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். 'ஹிலாரியா' (Hilaria) என்ற லத்தீன் சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். மார்ச் மாத இறுதியில் ரோமானியர்கள் இந்த விழாவை கொண்டாடுவார்களாம்.

அந்த நாளில் மக்கள் விதவிதமான வேடங்களை அணிந்து, மற்றவர்களை போல போலியாக நடித்து, கேலி கிண்டல் செய்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்றைய ஏப்ரல் 1 கொண்டாட்டங்களுக்கு இதுவே ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

வசந்த காலத்தின் வருகை

இயற்கையோடு இணைந்தும் இதற்கொரு காரணம் சொல்லப்படுகிறது. வட அரைக்கோளத்தில் (Northern Hemisphere) மார்ச் மாத இறுதியில் வசந்த காலம் தொடங்குகிறது. குளிர்காலம் முடிந்து பூக்கள் பூத்துக் குலுங்கும் இந்த நேரத்தில், வானிலை திடீர் திடீரென மாறும்.

ஒரு நிமிடம் வெயில் அடிக்கும், அடுத்த நிமிடம் மழை பெய்யும். இதை பார்த்த மக்கள், 'இயற்கை நம்மை ஏமாற்றி விளையாடுகிறது' என்று நினைத்தனர். இந்த மனநிலையே ஒருவரை ஒருவர் ஏமாற்றி விளையாடும் விளையாட்டாக மாறியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

உலகெங்கும் புன்னகை

இன்று இந்த நாள் வெறும் தனிநபர் விளையாட்டாக மட்டும் இல்லை. பெரிய பெரிய நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள் கூட ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று நம்ப முடியாத சில செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, பிறகு அது ஒரு வேடிக்கைதான் என்று சொல்லிச் சிரிக்க வைப்பார்கள்.

இந்தியாவில் ஹோலி பண்டிகை, ஈரானின் சிஸ்தா பெதார் (Sizdah Bedar) போன்ற பண்டிகைகளும் இதே காலக்கட்டத்தில் மகிழ்ச்சியையும், வேடிக்கையையும் முன்னிறுத்தி கொண்டாடப்படுகின்றன. இந்த தினத்தின் அடிப்படை நோக்கம் என்பது ஒருவரை இழிவுபடுத்துவதோ அல்லது கஷ்டப்படுத்துவதோ அல்ல.

நோ ஹுர்டிங் ஃப்ளீஸ்!

நம்முடைய பிஸியான வாழ்க்கையில், ஒரு நிமிடம் எல்லா கவலைகளையும் மறந்து, குழந்தையை போல சிரிப்பதற்கும் மற்றவர்களை சிரிக்க வைப்பதற்குமே இந்த நாள். ஆனால், நாம் செய்யும் குறும்புகள் மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், வெறும் புன்னகையை மட்டும் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

எனவே, இந்த ஏப்ரல் 1ம் தேதியும் உங்கள் நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ பழைய அந்த பள்ளி பருவத்து குறும்புகளில் ஒன்றை பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் அந்த பழைய நினைவுகளுக்கு போய் வருவோம்! அனைவருக்கும் ஏப்ரல் முட்டாள்கள் தின நல்வாழ்த்துகள்!


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement