தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது.
இனி வரும் மாதங்களில் மின்விசிறிகளை விட, வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஏர் கண்டிஷனர் பயன்பாடுதான் அதிகமாக இருக்க போகிறது. பல மாதங்களாக பயன்படுத்தாமல் கிடந்த ஏசியை, வெயில் வந்துவிட்டதே என திடீரென்று இயக்கும்போது அது சரியாக குளிர்ச்சியை தராமல் போகலாம் அல்லது வழக்கத்தை விட அதிக மின்சாரத்தை இழுத்து கரண்ட் பில்லை எகிற வைக்கலாம். மேலும், சமீபகாலமாக ஏசி வெடித்து விபத்துகள் ஏற்படும் செய்திகளையும் நாம் கடந்து வருகிறோம். இதுபோன்ற ஆபத்துகளை தவிர்க்கவும், ஏசியின் ஆயுளை நீட்டிக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் சில அடிப்படை பராமரிப்பு முறைகளை நாமே வீட்டில் செய்யலாம்.
ஏர் ஃபில்டர்களை சுத்தம் செய்வது கட்டாயம்
ஏசியில் குளிர்ச்சி குறைவதற்கு மிக முக்கிய காரணம், அதன் உட்புற யூனிட்டில் உள்ள ஃபில்டர்களில் படியும் தூசுதான். காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி தூய்மையான காற்றை வழங்குவது இதன் வேலை. ஆனால், இதில் அதிக அழுக்கு சேர்ந்தால் காற்று வெளியேறுவது தடைபடும். இதனால் அறை குளிர்ச்சியடைய அதிக நேரம் எடுக்கும். எனவே, ஏசியின் மேலுறையை திறந்து அதிலுள்ள வலை போன்ற ஃபில்டர்களை கழற்றி, சாதாரண தண்ணீரில் மென்மையாக கழுவ வேண்டும். கழுவிய பின் ஃபில்டரை வெயிலில் காய வைக்காமல், நிழலில் உலர்த்தி அல்லது துணியால் துடைத்து மீண்டும் பொருத்த வேண்டும். கோடைக்காலத்தில் இதை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது உங்கள் சுவாசத்திற்கும் நல்லது; ஏசியின் செயல்திறனுக்கும் நல்லது.
அவுட்டோர் யூனிட்டில் கவனம் தேவை
வீட்டிற்கு வெளியே மொட்டை மாடியிலோ அல்லது சுவரிலோ பொருத்தப்பட்டிருக்கும் அவுட்டோர் யூனிட் தான் ஏசியின் இதயம். இதுதான் அறையில் உள்ள வெப்பத்தை வெளியேற்றும் வேலையை செய்கிறது. இதில் காய்ந்த சருகுகள், குப்பைகள் அல்லது அதிகப்படியான தூசிகள் படிந்திருந்தால், வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் கம்ப்ரஸர் திணறும். ஒரு மென்மையான பிரஷ் அல்லது வாட்டர் ஸ்ப்ரே மூலம் அதன் வெளிப்புறப் பகுதியை மட்டும் நாமே லேசாக சுத்தம் செய்யலாம். அவுட்டோர் யூனிட்டை சுற்றி காற்று தடையின்றி செல்வதற்கு போதிய இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தண்ணீர் வெளியேறும் குழாய் அடைப்புகளை நீக்குதல்
ஏசி இயங்கும்போது அதிலிருந்து நீர் வெளியேறுவது வழக்கம். இந்த தண்ணீர் வெளியேறும் குழாயில் தூசியாலோ அல்லது பூச்சிகளாலோ அடைப்பு ஏற்பட்டால், நீர் வெளியேற முடியாமல் ஏசியின் உட்புற யூனிட் வழியாக வீட்டிற்குள்ளேயே தண்ணீர் வழிய தொடங்கும். எனவே, சீசனை தொடங்குவதற்கு முன் இந்த குழாயில் அடைப்பு ஏதும் இல்லை என்பதையும், தண்ணீர் சீராக வெளியேறுகிறது என்பதையும் சரிபார்த்து கொள்வது அவசியம்.
சரியான வெப்பநிலையை பராமரித்தல்
வெளியில் வெயில் கொளுத்துகிறது என்பதற்காக, வீட்டிற்குள் வந்ததும் பலரும் ஏசியை 16°C அல்லது 18°C-ல் வைப்பார்கள். இது அறையை சீக்கிரமாக குளிர்விக்கும் என்பது ஒரு தவறான நம்பிக்கையாகும். மாறாக, ஏசியை 24°C முதல் 26°C வரை வைப்பதே மனித உடலுக்கும் நல்லது, இயந்திரத்திற்கும் பாதுகாப்பானது. இதனால் மின்சார கட்டணமும் கணிசமாக குறையும். மேலும், ஏசியுடன் சேர்த்து குறைந்த வேகத்தில் சீலிங் ஃபேனையும் இயக்குவது, குளிர்ந்த காற்றை அறை முழுவதும் சீராக பரவ செய்யும்.
சர்வீஸ்
நமக்கு தெரிந்த அடிப்படை பராமரிப்புகளை நாம் செய்தாலும், வருடத்திற்கு ஒருமுறையாவது தகுதியான ஏசி மெக்கானிக்கை அழைத்து பரிசோதிப்பது நீண்ட கால பலன் தரும். குறிப்பாக, ஏசியில் கூலிங் கேஸ் அளவு சரியாக இருக்கிறதா, கம்ப்ரஸர் சீராக இயங்குகிறதா, மின் இணைப்புகளில் ஏதேனும் தளர்வு அல்லது கோளாறு உள்ளதா என்பதை நிபுணர்கள் மட்டுமே துல்லியமாக கண்டறிய முடியும். கூலிங் காயில்களை பிரஷர் கிளீனிங் மூலம் சுத்தம் செய்வது ஏசியின் கூலிங்கை பலமடங்கு அதிகரிக்கும். ஏசியை பயன்படுத்தும்போது ஜன்னல் மற்றும் கதவுகள் சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். அதேபோல, ஏசி பயன்படுத்தாத குளிர்காலங்களில் கூட, வாரத்திற்கு ஒருமுறையாவது 15 நிமிடங்களுக்கு ஏசியை ஆன் செய்து ஓடவிடுவது, மெஷின் துருப்பிடிக்காமல் நல்ல கண்டிஷனில் இருக்க உதவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன் ஏசியை எப்படி தயார்படுத்த வேண்டும்?
நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாத ஏசியை அப்படியே ஆன் செய்யக்கூடாது. முதலில் உட்புற யூனிட்டில் உள்ள ஏர் ஃபில்டர்களைக் கழற்றி தண்ணீரில் சுத்தமாகக் கழுவி, நிழலில் உலர்த்தி மீண்டும் பொருத்த வேண்டும். மேலும், அவுட்டோர் யூனிட்டில் சேர்ந்துள்ள குப்பைகள் மற்றும் தூசிகளை ஒரு பிரஷ் கொண்டு சுத்தம் செய்த பிறகே ஏசியை இயக்க வேண்டும்.
ஏசி ஃபில்டரை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்?
கோடைக்காலத்தில் ஏசியை தினமும் பயன்படுத்துபவர்கள், குறைந்தது 15 நாட்களுக்கு ஒருமுறையாவது ஃபில்டரை கழற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். இது ஏசியின் குளிர்ச்சித் திறனை அதிகரிப்பதோடு, சுத்தமான காற்றையும் வழங்கும்.

0 Comments