Ad Code

Responsive Advertisement

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை: நீதிபதி பரபர தீர்ப்பு




நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் பரபர தீர்ப்பை வழங்கியுள்ளது.


கடந்த 2020-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் போது காவல்துறையினர் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலால் இருவரும் படுகாயமடைந்து, அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இதன் விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவல்துறையினர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மிக முக்கிய சாட்சியங்களாகத் திகழ்ந்தனர். 

இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விரிவாக விசாரிக்கப்பட்டன. சுமார் 6 ஆண்டுகளாகத் தொய்வின்றி நடைபெற்ற இந்த விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட காவல்துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்கள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை அனைத்து நிலைகளிலும் தள்ளுபடி செய்தன. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி முத்துகுமரன் அவர்கள் வழக்கின் தீர்ப்பை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். அதன்படி, அன்றைய தினம் நீதிபதி முத்துகுமரன் சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில் தீர்ப்பை வாசித்தார். 


அப்போது அவர் தனது தீர்ப்பில், "உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர். நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனர் என சி.பி.ஐ குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். 

மேலும், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் மார்ச் 30 அன்று அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஏப்ரல் 2 அன்று நடந்த இறுதி வாதத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேருக்கும் தூக்கு தண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும், காவல்நிலைய மரண வழக்குகளில் இதற்குமுன்பு தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் சி.பி.ஐ தரப்பில் வாதிடப்பட்டது. 

இதையடுத்து, ஏப்ரல் 6 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து நீதிபதி இந்த வழக்கை ஒத்திவைத்திருக்கிறார். தண்டனை விவரங்கள் அறிவிப்பது ஏற்கனவே, ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 2-வது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கில் நீதிபதி முத்துகுமரன் இன்று திங்கள்கிழமை தீர்ப்பை வாசித்தார். அதில் அவர், "காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் நிராயுதபானியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது. குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்க வேண்டும். குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும்.

பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது. சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல் பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.

ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர். காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்."என்று கூறினார்  

இதன் அடிப்படையில், முதல் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை மற்றும் ரூ. 84 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 8 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அபராதத் தொகையில் மட்டும் வேறுபாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பென்னிக்ஸ்சின் தாயாருக்கு ரூ.1.04 கோடி இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தண்டனை விதித்தபின் பேனா நுனியை முறித்தார் நீதிபதி முத்துக்குமரன்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement