காலையில் அவசர அவசரமாக கிளம்பும் போது, சமைத்த உணவை எந்த பாத்திரத்தில் வைக்கிறோம் என்பது இன்று ஒரு பெரிய விவாதமாகவே மாறிவிட்டது. முன்பெல்லாம் நம் வீடுகளில் எவர்சில்வர் தூக்குகளும், மூன்று அடுக்கு டிப்பன் பாக்ஸ்களும்தான் ராஜாவாக இருந்தன. காலப்போக்கில் பிளாஸ்டிக் டப்பாக்கள் வந்தன, அதன் ஆபத்து புரிந்ததும் 'டப்பர்வேர்' என்று மாறினோம்.
இப்போது மீண்டும் ஆரோக்கியம் தேடி ஸ்டீல் பக்கமும், புது வரவான கண்ணாடி டப்பாக்கள் பக்கமும் நம் கவனம் திரும்பியிருக்கிறது. அலுவலகத்திற்குப் போகும் போதும் சரி, வீட்டில் மிஞ்சிய உணவை எடுத்து வைக்கும் போதும் சரி, இந்த இரண்டில் எது சிறந்தது என்பதில் நமக்குள் ஒரு சின்ன குழப்பம் இருக்கவே செய்கிறது.
சமையலறையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிவிட்டு, கண்ணாடிப் பொருட்கள், ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஈயம் கலக்காத உணவுத் தட்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள் என்கிறது 5 timeless habits for better health என்ற தலைப்பில் வெளியான Harvard ஆய்வு.
காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் ஸ்டீல் டப்பாக்கள்
நமது சமையலறையில் பல ஆண்டுகளாக இருக்கும் ஸ்டீல் பாத்திரங்கள் இப்போதும் ஒரு நம்பிக்கையான தேர்வாகவே இருக்கின்றன. நல்ல தரமான ஸ்டீல் டப்பாக்களில் சூடான உணவை வைக்கும்போது, அதிலிருந்து எந்த கெட்ட வாசனையோ அல்லது வேதிப்பொருட்களோ உணவில் கலப்பதில்லை. பிளாஸ்டிக்கில் இருக்கும் பிபிஏ (BPA) போன்ற ஆபத்துகள் இதில் இல்லை என்பது பெரிய நிம்மதி.
இதன் மிகப்பெரிய வசதி என்னவென்றால், தவறி கீழே விழுந்தாலும் ஒரு சின்ன பள்ளம் விழுமே தவிர, டப்பா உடையாது. பேருந்துப் பயணம், ரயில் பயணம் அல்லது குழந்தைகளின் பள்ளிப் பைகளில் வைத்து அனுப்ப இதுதான் மிகவும் பாதுகாப்பானது.
ஆனால், ஸ்டீல் டப்பாவில் இருக்கும் ஒரே சிக்கல், அதை மைக்ரோவேவ் ஓவனில் வைத்துச் சூடுபடுத்த முடியாது. மேலும், தக்காளி தொக்கு அல்லது எலுமிச்சை சாதம் போன்ற புளிப்பான உணவுகளை ஒரே டப்பாவில் பல நாட்கள் வைத்திருந்தால், அது அந்த உலோகத்துடன் வினைபுரிந்து சுவையைச் சற்றே மாற்ற வாய்ப்புண்டு.
நவீன சமையலறையின் கண்ணாடி டப்பாக்கள்
இன்றைய காலகட்டத்தில் பலரும் கண்ணாடி டப்பாக்களை விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்குக் காரணம், அதில் இருக்கும் தெளிவுதான். ஃப்ரிட்ஜில் எந்த டப்பாவில் என்ன இருக்கிறது என்று தேட வேண்டிய அவசியமே இல்லை. கண்ணாடி என்பது முற்றிலும் ஒரு 'நியூட்ரல்' பொருள்.
அதாவது, நீங்கள் எவ்வளவு புளிப்பான குழம்பு அல்லது காரமான உணவை வைத்தாலும், அது அந்த உணவின் தன்மையைப் பாதிக்காது. வேலைக்கு செல்பவர்களுக்கு இது மிகவும் வசதி. அப்படியே எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்துச் சூடுபடுத்திக் கொள்ளலாம்.
ஆனால், இதைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சின்னக் கல் தட்டினாலும் உடைந்துவிடும் அபாயம் உண்டு. அதுமட்டுமில்லாமல், ஸ்டீல் டப்பாக்களை விட இவை எடை அதிகம் என்பதால், தினமும் அலுவலகத்திற்குத் தூக்கிச் செல்வது கொஞ்சம் அலுப்பைத் தரும்.
பாதுகாப்பு மற்றும் நடைமுறை பயன்பாடு
ஆரோக்கிய ரீதியாகப் பார்த்தால், கண்ணாடி டப்பாக்கள் சற்றே முன்னிலையில் இருக்கின்றன. ஏனெனில், உணவில் இருக்கும் அமிலத்தன்மையால் கண்ணாடி எந்த மாற்றத்திற்கும் உள்ளாவதில்லை. ஆனால், இந்தியச் சூழலில் நமது பரபரப்பான காலை நேரங்களுக்கு ஸ்டீல் டப்பாக்களே கையாள்வதற்கு எளிதாக இருக்கின்றன.
பலர் இப்போது ஒரு கலவையான முறையைப் பின்பற்றுகிறார்கள். வீட்டில் ஊறுகாய், புளிக்குழம்பு அல்லது மீதமான உணவுகளைச் சேமிக்கக் கண்ணாடி டப்பாக்களைப் பயன்படுத்துகிறார்கள். அலுவலகம் அல்லது வெளியில் செல்லும் போது பாதுகாப்பான ஸ்டீல் டப்பாக்களைத் தேர்வு செய்கிறார்கள். பிளாஸ்டிக் டப்பாக்களை முழுமையாகத் தவிர்த்துவிட்டு, இந்த இரண்டில் எதை மாற்றாகப் பயன்படுத்தினாலும் அது ஆரோக்கியமான முடிவுதான்.

0 Comments