Ad Code

Responsive Advertisement

ஆபத்தாகும் பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச்





வீட்டின் சமையலறையில் சிங்க் ஓரத்தில் எப்போதும் ஈரப்பதத்துடன் கிடக்கும் அந்த சிறிய ஸ்பாஞ்சிற்கும் (Sponge), உலகளாவிய சுற்றுச்சூழல் மாசுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஒவ்வொரு முறை, நாம் பயன்படுத்திய பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் கறைகளை நீக்க அந்த ஸ்பாஞ்சை எடுத்து சோப்பு தேய்த்து தேய்க்கிறோம்.

பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமான ஒரு பொருளாக தோன்றும் இந்த ஸ்பாஞ்ச், ஒவ்வொரு முறையும் நாம் பாத்திரம் கழுவும்போது கண்ணுக்குத் தெரியாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக (University of Bonn) ஆராய்ச்சியாளர்கள், நாம் அன்றாடம் செய்யும் இந்த பாத்திரம் கழுவும் வேலையின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்தனர். நாம் பாத்திரங்களை தேய்க்கும்போது, அந்த ஸ்பாஞ்சிலிருந்து மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) பிரிந்து தண்ணீரோடு கலந்து வெளியேறுகின்றன.

இந்த சிறிய செயல் எப்படி ஒரு பெரிய பாதிப்பாக மாறுகிறது என்பதையும், இதில் ஸ்பாஞ்சை விட மோசமான ஒரு 'வில்லன்' ஒளிந்திருப்பதையும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது. அதன் விவரம் பின்வருமாரு..

ஸ்பாஞ்சிற்குள் ஒளிந்திருக்கும் பிளாஸ்டிக் உலகம்

இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான ஸ்பாஞ்ச்கள் பாலியூரிதீன் (Polyurethane) போன்ற பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களால் ஆனவை. இவை பாத்திரங்களை தேய்ப்பதற்கு மென்மையாகவும், அதேசமயம் கறைகளை நீக்க உறுதியாகவும் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு முறை நாம் அந்த ஸ்பாஞ்சை அழுத்தி தேய்க்கும்போதும், பிழியும்போதும் அதிலிருந்து நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உடைந்து வெளியேறுகின்றன.

இவை எவ்வளவு சிறியவை என்றால், நமது வெறும் கண்ணால் அவற்றைப் பார்க்க முடியாது. பாத்திரம் கழுவி முடித்ததும், அந்த தண்ணீரோடு சேர்ந்து இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களும் கழிவுநீர் குழாய் வழியாகப் பயணிக்கத் தொடங்குகின்றன. அங்கிருந்து ஆறுகள், கடல்கள் மற்றும் மண்ணை சென்றடைந்து, இறுதியில் உணவு சங்கிலி வழியாக மீண்டும் நமக்கே திரும்பி வருகின்றன.

'ஸ்பாஞ்ச் பாட்' (SpongeBot) செய்த சோதனை

ஆராய்ச்சியாளர்கள் இதை வெறும் ஆய்வகத்தோடு நிறுத்தி கொள்ளாமல், பொதுமக்களையும் இதில் ஈடுபடுத்தினர். ஜெர்மனி மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல வீடுகளில் மக்கள் தங்களது அன்றாடப் பாத்திரங்களைக் கழுவும்போது என்ன நடக்கிறது என்பதை ஆவணப்படுத்தினர்.

ஒரு ஸ்பாஞ்ச் பயன்படுத்தப்படுவதற்கு முன்னால் அதன் எடை எவ்வளவு, சில வார பயன்பாட்டிற்கு பிறகு அதன் எடை எவ்வளவு என்பது துல்லியமாக கணக்கிடப்பட்டது. அதே சமயம், ஆய்வகத்தில் 'ஸ்பாஞ்ச் பாட்' என்ற இயந்திரத்தை பயன்படுத்தி, ஒரு மனிதர் எவ்வளவு அழுத்தம் கொடுத்து பாத்திரத்தை தேய்ப்பாரோ அதே அழுத்தத்தில் ஸ்பாஞ்ச்கள் சோதிக்கப்பட்டன. இதன் மூலம், ஒரு ஸ்பாஞ்ச் தனது வாழ்நாளில் எவ்வளவு பிளாஸ்டிக்கை இழக்கிறது என்பது கண்டறியப்பட்டது.

புள்ளிவிவரங்கள் சொல்லும் அதிர்ச்சி

இந்த ஆய்வின்படி, ஒரு தனிநபர் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் மூலம் மட்டும் ஆண்டுக்கு சுமார் 0.68 கிராம் முதல் 4.21 கிராம் வரை நுண் பிளாஸ்டிக் துகள்கள் சுற்றுச்சூழலில் கலக்கின்றன. இது பார்ப்பதற்கு மிகச் சிறிய அளவாக தோன்றலாம்.

ஆனால், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையோடு ஒப்பிட்டு பார்த்தால், உதாரணமாக ஜெர்மனி போன்ற ஒரு நாட்டில் மட்டும் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான டன் பிளாஸ்டிக் துகள்கள் வெறும் சமையலறை ஸ்பாஞ்ச் மூலமாகவே கழிவுநீரில் கலக்கின்றன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இதில் பெரும்பகுதியைத் தடுத்தாலும், கணிசமான அளவு துகள்கள் தப்பித்து இயற்கை நீராதாரங்களுக்குள் சென்றுவிடுகின்றன.

உண்மையான வில்லன்: தண்ணீர் வீணாவதே பெரிய பாதிப்பு

இந்த ஆய்வில் கிடைத்த மிக முக்கியமான மற்றும் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், ஸ்பாஞ்ச் வெளியிடும் பிளாஸ்டிக்கை விட, பாத்திரம் கழுவும்போது நாம் பயன்படுத்தும் தண்ணீர் தான் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதுதான்.

ஆய்வின்படி, பாத்திரம் கழுவுவதால் ஏற்படும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதிப்பில் 85% முதல் 97% வரை நாம் தண்ணீரைத் தாராளமாக திறந்து விடுவதாலேயே ஏற்படுகிறது. பாத்திரத்தை தேய்க்கும்போதும், சோப்பு போடும்போதும் குழாயை திறந்து வைத்து தண்ணீரை வீணாக்குவது, ஸ்பாஞ்ச் வெளியிடும் பிளாஸ்டிக்கை விட பல மடங்கு அதிக தீங்கானது.

நாம் செய்ய வேண்டிய எளிய மாற்றங்கள்

தண்ணீர் சிக்கனம்: பாத்திரங்களைத் தேய்க்கும் போது குழாயை மூடி வைக்கவும். தேவைப்படும்போது மட்டும் தண்ணீரை பயன்படுத்தினால் பாதிப்பை கணிசமாகக் குறைக்கலாம்.

ஸ்பாஞ்ச் தேர்வு: பிளாஸ்டிக் கலப்பு குறைவாக உள்ள அல்லது இயற்கையான நார் (Coir) கொண்டு செய்யப்பட்ட தேய்ப்பான்களைப் பயன்படுத்தலாம்.
ஆயுட்காலம்: ஒரு ஸ்பாஞ்சை மிக விரைவாக தூக்கி எறியாமல், அதன் முழுத் திறனையும் பயன்படுத்தினால் புதிய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதைத் தவிர்க்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement