Wolf Super Moon என அழைக்கப்படும் 2026ம் ஆண்டின் முதல் பௌர்ணமி நிகழவுள்ளது!
2026-ன் முதல் வானியல் விருந்தாக, ஜன.3 அன்று 'ஓநாய் சூப்பர் மூன்' நிகழவுள்ளது. வழக்கமான பௌர்ணமியை விட இது அளவில் பெரியதாகவும், அதீத பிரகாசத்துடனும் காட்சியளிக்கும்.
புத்தாண்டு பிறந்தாலே புதிய எதிர்பார்ப்புகள் நம்மிடம் தொற்றிக்கொள்ளும். ஆனால், 2026-ம் ஆண்டு இயற்கை நமக்கு ஒரு அற்புதமான வானியல் விருந்துடன் தொடங்கவுள்ளது. ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ? என்று பாடும் அளவுக்கு, வழக்கத்தை விடப் பெரியதாகவும், அதீத பிரகாசத்துடனும் ஒரு முழு நிலவு நம் கண்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.
எப்போது நிகழ்கிறது?
2026-ம் ஆண்டின் முதல் பௌர்ணமி தினமான ஜனவரி 3-ம் தேதி இந்த 'ஓநாய் சூப்பர் மூன்' நிகழ்வு வானில் அரங்கேற உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அனைவரும் இந்த அழகிய காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.
ஏன் இதற்கு 'ஓநாய் சூப்பர் மூன்' என்று பெயர்?
ஜனவரி மாதத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவின் போது, உணவிற்காக அலைந்து திரியும் ஓநாய்களின் சத்தம் (ஊளையிடுதல்) வழக்கத்தை விட அதிகமாகக் கேட்கும். பழங்கால நம்பிக்கைகள் மற்றும் அதன் அடிப்படையில் உருவான காரணங்களால், ஜனவரி மாத முழு நிலவை 'ஓநாய் நிலவு' (Wolf Moon) என்று அழைக்கின்றனர்.
சூப்பர் மூன் - அப்படி என்ன சிறப்பு?
இந்த நிலவு ஏன் மற்ற பௌர்ணமிகளை விடச் சிறப்பு வாய்ந்தது என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் ஒன்று உண்டு. நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதையில், பூமிக்கு மிக அருகில் வரும் நிலையை அடையும் போது இந்த 'சூப்பர் மூன்' நிகழ்கிறது. பூமிக்கு அருகில் வருவதால், வழக்கமான பௌர்ணமி நிலவை விட இது அளவில் பெரியதாகத் தெரியும். நிலவின் ஒளி வழக்கத்தை விட மிக அதிக பிரகாசமாகவும், தெளிவாகவும் காட்சியளிக்கும். ஜன.3-ம் தேதி அன்று இரவு மறக்காமல் வானத்தைப் பாருங்கள். இயற்கையின் இந்த மாபெரும் இயற்கையின் கலைப்படைப்பைக் கண்டு ரசிக்கத் தவறாதீர்கள்.

0 Comments