ஹார்ட் அட்டாக்கின் போது உட்கொள்ளும் லோடிங் டோஸ் குறித்த விரிவான விளக்கம்
- லோடிங் டோஸ் என்றால் என்ன?
- லோடிங் டோஸை நெஞ்சு வலி ஏற்பட்டவரே உடனே போட்டுக் கொள்ளலாமா?
- லோடிங் டோஸின் சாதக பாதகங்கள் என்ன?
வாங்க பார்க்கலாம்.
லோடிங் டோஸ் என்றால் என்ன?
எந்த ஒரு நோய் நிலைக்கும்
உடனடி அவசர சிகிச்சையாக உடனடி தீர்வுக்காக உயிர்காக்கும் நடவடிக்கைக்காக
வழக்கமாக வழங்கப்படும் அளவுகளை விட சில மடங்கு அதிகமான அளவில் மருந்தை உடனே வழங்குவது "லோடிங் டோஸ்" எனப்படும்.
லோடிங் டோஸை நெஞ்சு வலி ஏற்பட்டவரே உடனே போட்டுக் கொள்ளலாமா?
- முதல் வழி
ஒருவருக்கு நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்பட்டவுடன்
அவர் உடனே மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும்.
அங்கு அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட வேண்டும். அதில் ஈசிஜியில் ரத்த நாள அடைப்புக்கான மாற்றம் கண்டறியப்பட்டால்
உடனே மருத்துவரின் வழிகாட்டுதலின் படி லோடிங் டோஸ் வழங்கப்படும். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும்.
ஈசிஜியில் மாற்றம் இல்லாமலும் இதய ரத்த நாள அடைப்பு (NON STEMI) இருக்கலாம். அப்போதும் மருத்துவரின்/ மருத்துவ ஊழியர்களின் அறிவுரையின் பேரில் லோடிங் டோஸ் உட்கொள்ளலாம்.
சந்தேகத்தின் பலன் நோயாளியின் உயிரைக் காப்பதற்கு வழங்கப்பட வேண்டும்.
- இரண்டாம் வழி
அருகில் பெரிய மருத்துவமனைகள் இல்லாத சூழ்நிலையில்
ஈசிஜி எடுக்க இயலாத சூழ்நிலையில்,
தனக்கு வந்திருப்பது
இதய ரத்த நாள அடைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பின்
லோடிங் டோஸ் மாத்திரைகளை சுயமாக உட்கொண்டு விட்டு பெரிய மருத்துவமனை நோக்கி விரைந்திடலாம்.
இங்கும் சந்தேகத்தின் பலன் உயிரைக் காப்பதற்கு வழங்கப்படுகிறது.
இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு நெஞ்சு வலி வரும் போது
லோடிங் டோஸ் மாத்திரைகளாக
- ஆஸ்பிரின் (ASPIRIN) - 300 மில்லிகிராம்
- க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) - 300 மில்லிகிராம்
- அடோர்வாஸ்டாட்டின் (ATORVASTATIN) - 80 மில்லிகிராம்
மேற்கூறிய மாத்திரைகளை ஒன்றாக வழங்கப்படுகிறது.
மேற்கூறிய மாத்திரைகளே "இதய ரத்த நாள அடைப்பிற்கான லோடிங் டோஸ்" ஆகும்
ஆஸ்பிரினும் க்ளோபிடோக்ரெலும் - ரத்த தட்டணுக்களை ஒன்றிணைந்து ரத்தக் கட்டியை மேலும் வளர விடாமல் தடுக்கின்றன.
அடோர்வாஸ்டாட்டின் மாத்திரை - பிளவுற்ற ரத்த நாளத்தை மேலும் பிளவுறாமல் அதன் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கிறது
இவையன்றி வேறு மாத்திரைகளை லோடிங் டோஸாக பாவிக்க வேண்டாம்.
குறிப்பாக "ஐசோ சார்பைடு டை நைட்ரேட்" எனும் மாத்திரையை லோடிங் டோஸாக இது போன்ற நேரங்களில் உபயோகிக்குமாறு தகவல்கள் வெளிவருகின்றன.
அது ஆபத்தில் முடியலாம்.
காரணம்
நைட்ரேட் வகை மருந்துகள் இதயத்தின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதுடன் உடலில் உள்ள சிரைகளை விரவடையச் செய்கின்றன. இதன் மூலம் இதயத்தை நோக்கி அதிக ரத்தம் வருவதை தடுக்கின்றன.
மேலும் இவ்வாறு சிரைகளை விரிவடையச் செய்வதால் ரத்த அழுத்தம் வெகுவாகக் குறையும்.
மாரடைப்புகளில் இதயத்தின் கீழ்ப்புற சுவர் தசைகளுக்கு (INFERIOR WALL MYOCARDIAL INFARCTION) ஊட்டமளிக்கும் தமனியில் அடைப்பு ஏற்பட்டால்
இதயத்தின் வலப்பக்க வெண்ட்ரிகிள் அடங்கிய தசைகள் செயல்திறன் குன்றும்.
இதனால் ஏற்கனவே ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் குறைவாக இருக்கும்.
இந்த நிலையில் நைட்ரேட் மாத்திரை உட்கொள்ளப்பட்டால் மேலும் ரத்த அழுத்தம் குறைந்து அது இதயத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே நைட்ரேடஸ் வகை மருந்துகளை ஐசியூ வசதி உள்ள இடங்களில் மருத்துவரின் கண்காணிப்பில் ஏற்பட்டிருப்பது
எந்த வகையான மாரடைப்பு என்பதை அறிந்து வழங்குவதே சரி
மேலும் ஆணுறுப்பு விரைப்புத்தன்மைக்காகவும் / நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்த நோயிலும் ( PULMONARY ARTERIAL HYPERTENSION) உட்கொள்ளப்படும் சில்டினாஃபில்/ டடலாஃபில் உள்ளிட்ட மருந்துகள் உட்கொள்வோர் நைட்ரேட் மாத்திரைகளை உட்கொண்டால் அபாயகரமான தாழ் ரத்த அழுத்தநிலை ஏற்படும்.
மேலும் இந்த மாத்திரைகளை உட்கொண்டு விட்டதால் முழு நிவாரணமும் கிடைத்து விடும் என்ற தவறான நம்பிக்கையில் வீட்டிலேயே இருந்து விடக்கூடாது. இது கோல்டன் ஹவரான ஒரு மணிநேரத்திற்கு மட்டுமே தனது பணியைச் செய்யும்.
எனவே உடனே பெரிய மருத்துவமனைகளுக்கு விரைந்திட வேண்டும்.
மேற்சொன்ன மாத்திரைகள் நாம் பெரிய மருத்துவமனைகளை அடையும் வரை நேரத்தை நமக்கு வழங்கக் கூடியவையாக இருக்குமேயன்றி இந்த மாத்திரைகள் முழு சிகிச்சையன்று
ஒருவருக்கு இதய ரத்த நாள அடைப்பு ஏற்படாமல் இந்த லோடிங் டோஸ் மாத்திரைகளை போட்டு விட்டால் ஏற்படும் சாதக பாதக அம்சங்கள் என்ன?
இதற்கு தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையினால் கடந்த 27.6.2023 அன்று முதல் "இதயம் காப்போம்" திட்டத்தின் கீழ்
தமிழ்நாட்டில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் லோடிங் டோஸ் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது.
நெஞ்சு வலி என்று வரும் நோயாளிகளுக்கு இந்த லோடிங் டோஸ் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது.
ஜூன் 2023 முதல் மே 2024 வரை செய்யப்பட்ட ஆய்வில், நெஞ்சு வலி ஏற்பட்டு வந்த
6090 நோயர்களுக்கு லோடிங் டோஸ் வழங்கப்பட்டு பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுள் 953 (16%) பேருக்கு இதய ரத்த நாள அடைப்பு மீட்பு சார்ந்த மேல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
சிகிச்சை வழங்கப்பட்டவர்களில், 56% பேருக்கு ஆஞ்சியோ கிராஃபி செய்யப்பட்டது.
39% பேருக்கு ரத்தக் கட்டியைக் கரைக்கும் த்ராம்போலைசிஸ் சிகிச்சையும், 23% பேருக்கு ஸ்டெண்ட் பொருத்துதலும், 8% பேருக்கு பைப்பாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
இதன்விளைவாக, லோடிங் டோஸ் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களில் 97.7% பேர் உயிர்பிழைத்ததும் 2.2% பேர் மட்டுமே இறந்தது குறிப்பிடத்தக்கது.
லோடிங் டோஸ் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவருக்கு இதய ரத்த நாள அடைப்பு சார்ந்த மேல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
சரி மீதி உள்ள நான்கு பேருக்கு இதய அடைப்பு ஏற்படாமலும் லோடிங் டோஸ் வழங்கப்பட்டதே அதனால் பிரச்சனை இல்லையா?
இதய ரத்த நாள அடைப்பைப் பொருத்தவரை ஏற்கனவே கூறியது போல, லோடிங் டோஸாக வழங்கப்படும் மாத்திரைகள் ரத்த உறைதலைத் தடுப்பவை.
எனவே
- முதியோர்கள்
- ரத்த உறைதல் குறைபாடு இருப்பவர்கள்
- இரைப்பைப் புண்/ குடல் புண் இருப்பவர்கள்
- புற்று நோய் இருப்பவர்கள்
- கல்லீரல் நோய் இருப்பவர்கள்
- சமீபத்தில் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டவர்கள்
ஆகியோருக்கு அதீத ரத்தப் போக்கை ஏற்படுத்திடும் வாய்ப்பு உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சாதகங்கள் என்ன?
மேற்கூறிய சிக்கல்கள் இல்லாத, இளைய வயதில் இருப்பவர்கள் குறிப்பாக 40-55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தங்களுக்கு வந்திருப்பது அசாதாரணமான நெஞ்சு வலி என்று தோன்றும் போது சந்தேகப்பட்டு லோடிங் டோஸ் எடுப்பதால் பாதகங்களை விட சாதகம் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
லோடிங் டோஸ் உயிர்காக்கும் முதல் சிகிச்சை
அதை மருத்துவமனை சென்றபின் உட்கொள்ளலாமா..
நோயாளி தானே உட்கொள்ளலாமா..
என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொருத்து அமைகிறது.
சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து சுயமாக லோடிங் டோஸ் உட்கொள்வதை செய்ய முடியும்.
இயன்றவரை, மருத்துவமனைக்கு விரைந்து செல்வதும்,
இதய ரத்த நாள அடைப்பை மருத்துவர் வழி உறுதி செய்து கொண்டு லோடிங் டோஸ் எடுப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.
லோடிங் டோஸ் என்பது முதல் சிகிச்சையே அன்றி அது முழுமையான சிகிச்சை அன்று.
எனவே கீழ்காணும் இரண்டு செயல்திட்டங்கள் உங்களுக்காக
நெஞ்சு வலி-> மருத்துவமனை விரைதல் -> ஈசிஜி / ட்ரோபோனின்-> இதய ரத்த நாள அடைப்பு உறுதி செய்யப்படல்-> லோடிங் டோஸ் -> த்ராம்போலைசிஸ்/ ஆஞ்சியோ ப்ளாஸ்டி-> ஸ்டெண்டிங்/ பைப்பாஸ்
இரண்டாவது செயல்முறை
மருத்துவமனைகள் அருகில் இல்லாத இடம் / இரவு
நெஞ்சு வலி -> வந்திருப்பது இதய ரத்த நாள அடைப்பு என்று சந்தேகம் அதிகமாக இருப்பது -> முதியோர்/ கல்லீரல் நோய் / இரைப்பைப் புண்/ புற்று நோய் ஆகியன இல்லை என்பதை உறுதி செய்தல் -> சந்தேகத்தின் பலனை உயிர்காக்க வழங்கி லோடிங் டோஸ் எடுத்துக் கொள்ளுதல்-> பெரிய மருத்துவமனைக்கு ஒரு மணிநேரத்திற்குள் விரைதல்
மேற்கூறிய இரண்டில் முதல் வழி அதிகம் பரிந்துரைக்கப்பட்டது
எனினும் தங்களது சூழ்நிலை பொருத்து முடிவெடுக்கவும்
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

0 Comments