திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டு பலியானதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனிடையே, காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் சென்று, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அரசின் நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
அப்போது, முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில், ”திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்தாரிடம் இன்று(ஜூலை 1) முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமார் வீட்டில் உடனிருந்தார்.
இந்த தொலைபேசி உரையாடலின்போது, அஜித்குமாரின் குடும்பத்திடம் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்த முதல்வர் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று வாக்குறுதி அளித்திருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
0 Comments