தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை இயக்குனரான ச.கண்ணப்பன் பள்ளிக்கூடங்களில் கல்வித்தரம் சிறக்கவும், அடிப்படை வசதிகளை பெருக்கவும் ஆசிரியர்களின் பணி சிறக்கவும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடையவும் சீரிய பணிகளை ஆற்றி வருகிறார்.
பொதுவாக தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தலைமை அலுவலகம் இருக்கும் சென்னையிலேயே தங்கள் அலுவலகத்தில் அமர்ந்துதான் பணிகளை கவனிப்பார்கள்.
ஆனால் கண்ணப்பனை பொறுத்தமட்டில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆங்காங்கே உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் சென்று ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும், மாணவர்களின் கற்றல் ஆற்றலையும் நேரில் பார்த்து தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு வேலூரில் ஒரு கருத்தரங்கில் அவர் பேசும்போது அதிர்ச்சி மற்றும் கவலை தரத்தக்க தகவலை கூறினார்.
மாணவிகளை ஆசிரியர்கள் குழந்தைகளாக பார்க்கவேண்டும். தமிழகம் முழுவதும் இதுவரை 350 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்சோ சட்டம் என்றால் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டமாகும். இதில் குழந்தைகள் என்றால் 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை குறிக்கும். இந்த வயது வரம்பில் உள்ள குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமையை இழைப்பவர்கள் மீது இந்த சட்டம் பாயும்.
இந்த 350 ஆசிரியர்களில் 50 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துவிட்டு மாணவர்களுக்கு சரியான முறையில் பாடங்களை கற்றுத்தரவேண்டும். பள்ளியை மாணவர்களுக்கு பிடித்த இடமாக மாற்றவேண்டும். பள்ளிகளில் நன்னெறிகளை கற்றுத்தர வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழவேண்டும் என்றும் பேசினார்.
'ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி' என்பது முதுமொழியாகும். இதுபோல 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்றும் தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆக அறப்பணி செய்யும் ஆசிரியர்கள் தெய்வத்துக்கு இணையாக போற்றப்படுகிறார்கள்.
ஒரு நல்ல ஆசிரியர் ஒரு மாணவனை சிறந்த அறிவாளியாக மட்டுமல்லாமல், ஒழுக்கமுள்ள மனிதராகவும் மாற்றமுடியும். ஒருபக்கம் கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர், மறுபக்கம் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு நன்னெறியை போதித்து அவர்கள் மனதில் ஒளியையும் ஏற்றி அவர்களை நல்வழிப்பாதையில் அழைத்து செல்லும் ஆற்றலுடையவர்களுமாவார்கள். ஆசிரியர் பற்றி மகாகவி பாரதியார் கூறும்போது, ஆசிரியன் என் அழகிய நண்பன். அறிவை தருவான், தந்தை செய் பண்பினன் என்று ஆசிரியர் பணியின் தூய்மையை மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
அத்தகைய பண்புகொண்ட ஆசிரியர்களை சமுதாயம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்போது, எதுவும் அறியாத சின்னஞ்சிறு மலர்களை ஆசிரியர் என்ற போர்வையில் உள்ள சில காமுகர்கள் கசக்கி எறியும் சம்பவங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வருவது மிகவும் வேதனையளிக்கிறது.
அந்த காலங்களில் பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பமாட்டார்கள். ஆனால் இப்போது பெண் குழந்தைகளும் படிக்க வேண்டும், உயர் கல்விக்கு செல்லவேண்டும். உயர்ந்த பதவிகளை வகிக்கவேண்டும் என்ற ஆசை அந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களை பெற்றவர்களுக்கும், ஏன் சமுதாயத்துக்கும் இருக்கிறது. அந்த உயரிய எண்ணங்களை இதுபோன்ற கருப்பு ஆடுகள் சிதைத்து விடக்கூடாது.
மாணவர்களை போல, ஆசிரியர்களுக்கும் நன்னெறிகளை தலைமை ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் அவ்வப்போது வழங்கவேண்டும். இத்தகைய தவறு செய்யும் ஆசிரியர்களை பணியில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும்.
0 Comments