வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும், சேவைகளை சீரமைக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், வாக்காளர்கள் வசதிக்காக 3 முக்கிய மாற்றங்களை செய்ய தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்களை உடனடியாக நீக்கவும், பூத் சிலிப்களில் தொகுதி, வாக்கு செலுத்தும் இடம் உள்ளிட்டவைகளை பெரிய அளவில் அச்சிடவும், BLO எனப்படும் பூத் அளவிலான அதிகாரிகளின் அடையாள அட்டைகளை மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இறந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இனி முறையாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இறந்த வாக்காளர்களின் விவரங்களை இந்திய பதிவாளர் ஜெனரலிடம் ஆன்லைன் மூலம் பெற இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், இறந்தவர்களின் விவரங்கள் பதிவாளர் ஜெனரலிடம் இருந்து உடனுக்குடன் பெறப்படும். அந்த விவரங்கள், வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகள் மூலம் நேரில் களஆய்வு செய்து உறுதி செய்யப்படும். இதன்பின் அந்த வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும்.
மேலும் பூத் சிலிப்பின் வடிவமைப்பை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் வரிசை எண்கள் பெரிய எழுத்துக்களில் காட்டப்படும். இது வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது மற்றும் அதிகாரிகள் பட்டியலில் உள்ள பெயர்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.
அத்துடன், வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகளுக்கு நிலையான புகைப்பட அடையாள அட்டை வழங்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு, அவர்களுடன் வாக்காளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
0 Comments