தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களை அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்திருந்தது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா். மகாதேவன் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை வந்தபோது, தமிழக அரசின் 10 மசோதாக்களை நிலுவையில் வைத்ததும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும். தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டத்துக்கு எதிரானது. மசோதா மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத்தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநருக்கென பொதுவாக தனி விருப்புரிமை இருக்க முடியாது. மேலும், 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
0 Comments