TRAI New Regulations: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மொபைல் ஃபோன் பயனர்களுக்கு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்த மாற்றமானது கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொபைல் ஃபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய தேதியில் ஒட்டுமொத்த இந்திய அளவில் 120 கோடிக்கும் மேற்பட்ட மொபைல் ஃபோன் பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மொபைல் ஃபோன் பயனர்களுக்கு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, TRAI நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் 12வது திருத்தத்தின் கீழ் 2G தொலைபேசி பயனர்களுக்கு சிறப்பு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வசதியை உறுதி செய்யவும் கிராமப்புற மக்கள் பயனடையும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காலம் நீட்டிப்பு:
முன்னதாக இந்த பயனர்களின் சிறப்பு கட்டணச் சலுகைகளின் செல்லுபடி காலம் 90 நாட்களாக இருந்தது. ஆனால் புதிய விதிகளின்படி, இதன் காலம் 365 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்களுக்கு அடிக்கடி ரீசார்ஜ் செய்யவேண்டிய தொந்தரவு இனி இருக்காது.
10 ரூபாய் வவுச்சர்:
இதுபோக, டாப்-அப் வவுச்சர்களிலும் TRAI ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, 10 ரூபாய் வவுச்சர் மூலம் பயனர்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெறலாம். குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்த மாற்றமானது கொண்டுவரப்பட்டுள்ளது.
TRAI-யின் புதிய விதிகள்:
மேலும், ரீசார்ஜ் செயல்முறையை எளிதாக்கும் வகையில் வவுச்சர்களுக்கு முன்பு இருந்த வண்ணக் குறியீட்டு முறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படியாக TRAI-யின் இந்தப் புதிய விதிகள் மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் பயனர்கள் தங்களுடைய சிம்மை நீண்டகாலம் செயல்பாட்டில் வைத்திருக்க உதவும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments