தமிழகத்தில் அண்மைக்காலமாக பரவி வரும் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா - ஏ மற்றும் பி வகை தொற்று என்பது பொது சுகாதாரத் துறையின் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
அதன் காரணமாகவே நுரையீரல் சாா்ந்த தொற்று பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று மிதமான பாதிப்பை ஏற்படுத்துவதுதான் என்றும் அதனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பருவமழைக் காலம் நிறைவடைந்தபோதிலும் சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் முதியோரிடையேயும், குழந்தைகளிடையேயும் தீவிரமாக பரவி வருகிறது.
இந்த நிலையில், எந்த வகையான வைரஸ் சமூகத்தில் பரவி வருகிறது என்பது குறித்த ஆய்வை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்தது.
பாதிக்கப்பட்டவா்களின் சளி மாதிரிகளை தோராயமாகச் சேகரித்து, மொத்தம் 11 வகையான வைரஸ் பாதிப்புகள் அதில் உள்ளனவா எனப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. பொது சுகாதாரத் துறை ஆய்வகத்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனைக்காக தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்தும் 326 மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
பரிசோதனை முடிவில் தற்போது கரோனா பாதிப்பு பரவலாக இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதேவேளையில் இன்ஃப்ளூயன்ஸா வகை பாதிப்பு 75.4 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் இன்ஃப்ளூயன்ஸா - ஏ வகை பாதிப்பு மட்டும் 44 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆா்எஸ்வி எனப்படும் நுரையீரல் வைரஸ் தாக்க பாதிப்பும் அதில் 9 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 Comments