சென்னையில் பெய்து வரும் கனமழையினால் ஆட்டோ பழுதடைந்ததால் தவித்துக் கொண்டிருந்த டிரைவருக்கு, அரசு பஸ் டிரைவர் உதவிய நிகழ்வுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் மெல்ல, மெல்ல நகர்ந்து வருகிறது. மரக்காணம், மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்துள்ளன. பல்வேறு இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சாலைகளில் வெள்ளம் தேங்கியிருப்பதால், ஆங்காங்கே வாகனங்கள் பழுதடைந்துள்ளன. கொட்டும் மழையிலும் வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தி.நகர் பனகல் பார்க் சாலையில் மழைநீரில் ஆட்டோ பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர், ஆட்டோவை பின்புறத்தில் இருந்து தள்ளியபடி, சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு தள்ளிக் கொண்டு, மேடான பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் அந்த பஸ் டிரைவரை பாராட்டி வருகின்றனர்.
0 Comments