Ad Code

Responsive Advertisement

அடுத்தமாதம் 9-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை

 



தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.


தொடர்ந்து, பிப்.19-ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இரு பட்ஜெட்கள் மீதும் 22-ம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது.


அதனைத்தொடர்ந்து துறைகள்தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டன. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.


இந்நிலையில், அடுத்தமாதம் 9-ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "டிசம்பர் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் கூட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும். பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து படிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது " என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement