தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி எம்.எஸ். காந்தி(விஜய்). தான் என்ன தொழில் செய்கிறோம் என்பதை மனைவி சினேகாவுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கிறார் காந்தி. அவர்களுக்கு ஜீவன் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமாகிறார்.
காந்தியின் சிறப்பு குழுவில் சுனில் தியாகராஜன்(பிரசாந்த்), கல்யாண் சுந்தரம்(பிரபுதேவா), அஜய்(அஜ்மல் அமீர்), அவர்களின் பாஸ் நஸீர்(ஜெயராம்) ஆகியோர் இருக்கிறார்கள்.
குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சென்றபோது நடக்கும் சம்பவத்தால் காந்தியின் வாழ்க்கை மாறிவிடுகிறது. அவரின் வேலையும் தான். 17 ஆண்டுகள் கழித்து காட்டும்போது விமான நிலையத்தில் வேலை செய்கிறார் காந்தி. அவரும், மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள்.
மகள் சினேகாவுடன் இருக்கிறார். இந்நிலையில் வேலை விஷயமாக ரஷ்யாவுக்கு செல்கிறார் காந்தி. பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன மகன் ஜீவனை (இளம் விஜய்) ரஷ்யாவில் பார்க்கிறார் காந்தி. அதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கிறது.
முதல் பாதியில் ஆக்ஷன், எமோஷன் காட்சிகளுக்கு குறைவு இல்லை. ஆனால் அடுத்தது என்னவென்று எளிதில் கணிக்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட டுவிஸ்ட் வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. கிளைமாக்ஸில் சிஎஸ்கே போட்டியின்போது வைக்கப்பட்ட காட்சி சுவாரஸ்யமாக இல்லை.
கதையில் புதுமை இல்லை. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். அப்பா, மகன் விஜய் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. வழக்கமான கதையை விஜய் எனும் ஒருவரை மட்டுமே நம்பி படமாக எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
இரண்டு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய். அவரின் நடிப்பை குறை சொல்ல முடியாது. வில்லத்தனம் செய்தும் அசத்தியிருக்கிறார். கோட் படத்தின் மிகப் பெரிய பலமே தளபதி, இளைய தளபதி தான்.
பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகிபாபுவும், பிரேம்ஜியும் சிரிக்க வைக்கிறார்கள். அதில் பிரேம்ஜியை ஓவர்டேக் செய்துவிடுகிறார் யோகிபாபு.
கோட் படத்திற்கு இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். பாடல்கள் கை கொடுக்கவில்லை. விஜய், த்ரிஷா வரும் பாடல் மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படமாகவும், மற்றவர்களுக்கு சுமாரான படமாகவும் அமைந்துவிட்டது கோட். கோட் படம் நன்றாக இருக்கிறது ஆனால் விஜய்யின் கெரியரில் இது தான் GOAT என சொல்லும்படி இல்லை.
0 Comments