தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையில் தமிழ்நாடு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
இவரது ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 58 முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், அடிப்படை உரிமை கருதி ஜாமீன் வழங்கப்படுள்ளது.
நிபந்தனைகள் என்னென்ன?
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ பேசியதாவது:
1. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும்.
2. ரூ. 25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
3. அமலாக்கத்துறை மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
4. வெளிநாடு செல்வதற்கு தடை.
5. வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, அவர்களை நேரில் சந்தித்துப் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சராக தடையில்லை
மேலும், மீண்டும் தமிழகத்தின் அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு எவ்வித தடையும் கட்டுப்பாடும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
எப்போது வெளியே வருவார்?
சென்னை அடுத்த புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இன்று மாலை அல்லது நாளை காலை வெளியே வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியை வரவேற்க திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புழல் சிறைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 Comments