வருவாய் இழப்பை தடுக்க, ஒரு கடையில் இரு மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே மின் கட்டணமாக கணக்கிடுமாறு, பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது. ஒரு வீடு, ஒரு கடைக்கு ஒரு மின் இணைப்பு வழங்கப்படும். சிலர், அதிக மின் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, ஒரே வீடு, கடை, வணிக நிறுவனம் போன்றவற்றுக்கு முறைகேடாக இரண்டு - மூன்று மின் இணைப்புகளை தனித்தனியே பெற்றுள்ளனர்.
இதனால், ஒவ்வொரு மீட்டரிலும் குறைந்த அளவு மின் பயன்பாடு பதிவு ஆவதால், அதற்கு ஏற்ப மின் கட்டணம் குறைவாக வருகிறது. இது, மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. முறைகேடாக மின் இணைப்பு வழங்கியதற்கு, வாரியத்தில் பணிபுரியும் சிலரும் உடந்தை.
தற்போது, வருவாய் இழப்பை தவிர்க்கும் நடவடிக்கையில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. வீடு, கடை, வணிக நிறுவனம் போன்றவற்றில் ஆய்வு செய்து, ஒரே பிரிவுக்கு அதிக மின் இணைப்பு பெற்று இருந்தால், அவற்றை ஒரே இணைப்பாக ஒருங்கிணைத்து, ஒரே கட்டணம் கணக்கிடுமாறு, பொறியாளர்களுக்கு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments