பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின், மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவிருந்த நிலையில், அவர் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக் அமைப்பு வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய உடல் பரிசோதனையின்போது, வினேஷ் போகத், 50 கிலோ எடையை விட கூடுதலாக 100 கிராம் இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போட்டி விதிமுறைகளை மீறி கூடுதல் எடையில் இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வினேஷ் போகத் விளையாடாததால், அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான மல்யுத்தப் போட்டி 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் வருத்தத்தை அளிக்கிறது, இரவு முழுவதும் இந்தியக் குழுவினர் எடுத்த கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும், இன்று காலை 50 கிலோவுக்கும் கூடுதலாக சில கிராம் எடை கூடியிருக்கிறது. இது குறித்து இந்திய குழு வேறு எந்த கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளவில்லை. வினேஷ் போகத்தின் தனியுரிமையை மதிக்குமாறு இந்திய குழு கேட்டுக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்காள மல்யுத்தப் போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் தனது முதல் சுற்றிலேயே, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், 4 முறை உலக சாம்பியனுமான ஜப்பானின் யுய் கசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
காலிறுதியில் உக்ரைனின் ஆக்சனா விவச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அரையிறுதியில் 5-0 என்ற கணக்கில் கியூபாவின் கஸ்மன் லோபஸ் யுஸ்னெலிஸை முற்றிலுமாக வீழ்த்தி இறுதிக்குத் தகுதிபெற்றவர், இன்று ஒட்டுமொத்தமாக 100 கிராம் உடல் எடையால் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் விளையாடுவதிலிருந்தே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, டோக்யோ ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் விளையாடியிருந்தார். தற்போது உடல் எடையைக் குறைத்து 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றிருந்தார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக இந்திய ஒலிம்புக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதை இந்திய மக்கள் கொண்டாடி வந்த நிலையில், மல்யுத்த பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பதக்கத்துடன் நாடு திரும்பிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று தகவல் வெளியாகியிருப்பது விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
இந்திய மல்யுத்தப் சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷண் சிங் சரணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 2023ஆம் ஆண்டு பெரும்பகுதியில் அவரால் பயிற்சியில் ஈடுபட முடியாமல் போயிருந்த நிலையிலும், ஒலிம்பிக் போட்டியின் இறுதிவரை முன்னேறியிருந்தார்.
0 Comments