தேனியில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, சென்னையில் பொட்டலமாக தயாரித்து விற்ற, தலைமை செயலக பெண் ஊழியரும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் அருள், 38. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் முக்கிய புள்ளி. அவரின் மனைவி கோட்டீஸ்வரி, 35. தலைமை செயலகத்தில், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
சமீபத்தில், கஞ்சா விற்பனை தொடர்பாக அருள் கைது செய்யப்பட்டார். அவர், மனைவி, சகோதரர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பிரபு, 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, புரசைவாக்கம் தானா தெருவில் காத்திருந்தார். அதை அவரிடம், 1.20 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இதை நானும், என் மனைவி கோட்டீஸ்வரி, சகோதரர்கள் பழனி, கணபதி ஆகியோர் பொட்டலமாக தயாரித்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்று விடுவோம்.
கஞ்சாவை மொத்தமாக விற்க மாட்டோம். முதலில், 2 கிலோவை பொட்டலம் போட்டு விற்று விடுவோம். அதற்காக, இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோம். என்னிடம் கஞ்சா வாங்கி விற்க, சென்னையின் பல இடங்களில் கூட்டாளிகள் உள்ளனர்.
இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, கோட்டீஸ்வரியும் கைது செய்யப்பட்டார். அவர், எழும்பூர் நீதிமன்றத்தில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அருளை போலீசார் கைது செய்த போது, 17.29 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
அவரின் கூட்டாளிகளை, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
0 Comments