துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உள்ள முந்திரித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 51. பா.ஜ.,வில் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு உடன்குடி ஒன்றிய பொதுச் செயலராக உள்ளார்.
'கோவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார்' என அவர் கூறி வந்தார். அதை மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நண்பர்கள் கேலி செய்தனர். உடனே, 'அண்ணாமலை வெற்றி பெறவில்லை என்றால் பரமன்குறிச்சி பஜாரில் மொட்டை போட்டுக் கொண்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன்' என சவால் விடுத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அண்ணாமலை தோல்வியடைந்தார். இதனால், நேற்று முன்தினம் திடீரென பரமன்குறிச்சி பஜாரில், ரவுண்டானா அருகே நடுரோட்டில் அமர்ந்த ஜெய்சங்கர், நாவிதர் ஒருவரை வைத்து, மொட்டையடித்து, மீசையையும் எடுத்துக் கொண்டார். பின், ரவுண்டானாவை அவர் ஒருமுறை சுற்றி வந்தார்.
அதுபோல, துாத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 68, கூலித் தொழிலாளி. அ.தி.மு.க.,வின் தீவிர தொண்டர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., குறைந்தது 10 தொகுதியிலாவது, அ.தி.மு.க., வெற்றி பெறும் என அவர் நம்பினார்.
இதுதொடர்பாக, தி.மு.க.,வினரிடம் சவால் விட்ட செல்வகுமார், 'அ.தி.மு.க., வெற்றி பெறாவிட்டால், கட்சிக்காக என் ரத்தத்தை வழங்குவேன்' என, ஆவேசமாக கூறினார். தேர்தல் முடிவுகள் வந்த நிலையில், அ.தி.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து செல்வகுமார், தன் காலில் இரண்டு இடங்களில் கத்தியால் கிழித்து ரத்தத்தை காண்பித்து, 'கட்சிக்காக என் ரத்தத்தை தருகிறேன்' என கோஷமிட்டார்.
'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டுமானால், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும்' என, அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
0 Comments