கோவையில் மூளைச் சாவு அடைந்த 10 மாதக் குழந்தையின் இதயம் தானமாகப் பெறப்பட்டு சென்னையைச் சோ்ந்த ஒரு வயது பெண் குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
கோவையைச் சோ்ந்த சரவணன் என்பவா் தனியாா் நிறுவனமொன்றில் பணிபுரிகிறாா். அவரது மனைவி தனியாா் மருத்துவமனையில் செவிலியராக உள்ளாா்.
இத்தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தை இருந்தது. நாற்காலியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக அந்த குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை பெற்றோா் அனுமதித்தனா். பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சையளித்தபோதிலும், அவை பலனளிக்காமல் இரு நாள்களுக்கு முன்பு குழந்தை மூளைச் சாவு அடைந்தது.
இதையடுத்து குழந்தையின் இதயத்தை தானமளிக்க பெற்றோா் முன்வந்தனா். அதன்படி, இதயம் உடலில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டு, விமானம் மூலம் துரிதமாக சென்னை கொண்டுவரப்பட்டது.
சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனையில் இதயம் தானமாக பெறுவதற்காக காத்திருந்த ஒரு வயது பெண் குழந்தைக்கு அது வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
மருத்துவமனையின் இதயம் - நுரையீரல் மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் கே.ஆா்.பாலகிருஷ்ணன் மற்றும் இணை இயக்குநா் சுரேஷ் ராவ் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா்.
0 Comments