கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் மதுரை சின்னப் பிள்ளைக்கு உடனடியாக வீடுவழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் கடந்த 2000-ம் ஆண்டில் “ஸ்திரி சக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரைமாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை. அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் வீடுவழங்கும் திட்டத்தில் தனக்கு வீடுவழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப் பிள்ளைக்கு வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார். இதன்படி,சின்னப் பிள்ளைக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு சென்ட் வீட்டு மனையுடன்,பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுரஅடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு நிதிநிலைஅறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் சின்னப் பிள்ளைக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பதில்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ்வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு கட்டும் திட்டம். இதில் பயனாளிகளைக் கண்டறிந்து, மத்திய அரசின் நிதியைக் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பு மாநிலஅரசிடம் உள்ளது என்பதுகூட முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியாமல் இருப்பது வேதனைக்குரியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு வீடு கட்ட நிதியும், இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பதுகூடத் தெரியாமல்,அரசியல் செய்யக் கிளம்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அது மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர், வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார். அதுகுறித்து பலமுறை முறையிட்ட பின்னரும், எந்த தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் சின்னப்பிள்ளை. இவை அனைத்தையும் மறைத்துவிட்டு, ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
0 Comments