விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவின்போது, கூடுதலாக 40 ரூபாய் செலுத்தினால், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையில் பிற பகுதிகளுக்கு, மாநகர பஸ்களில் பயணிக்கும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், மாநகர பஸ்களின் தேவை அதிகரித்து வருகிறது.
வடசென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால், இரண்டு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிளாம்பாக்கத்தில் இருந்து சிரமம் இன்றி செல்ல வசதி வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவின்போது, கூடுதலாக 40 ரூபாய் செலுத்தினால், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு மாநகர பஸ்களில் பயணிக்கும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
கிளாம்பாக்கத்தில் இறங்கிய பின், அடுத்த நான்கு மணி நேரம் வரை, இந்த டிக்கெட்டை பயன்படுத்தி, இரண்டு, மூன்று மாநகர பஸ்களில் பயணம் செய்யலாம். இந்த புதிய திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதேபோல், மாநகர போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான மொபைல் போன் செயலியையும் அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.
இந்த செயலி வாயிலாக, நிர்வாகத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளலாம்; விடுப்பு எடுக்கவும் விண்ணப்பிக்கலாம்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments