Ad Code

Responsive Advertisement

Google Maps காட்டிய வழியை பார்த்து காரை ஓட்டிய டிரைவர் - சிக்கலில் சிக்கினார்

 



நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பலரும் கூகுள் மேப்புகளை பயன்படுத்தி அது காட்டும் வழியை பின்பற்றியும் சென்று வருகிறார்கள். கூகுள் மேப்பில் காட்டும் வழியை பார்த்து வாகனத்தை ஓட்டி செல்பவர்கள் சில நேரங்களில் தவறான வழியில் திசை மாறி செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குழுவினர் தங்களது காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.


தொடர்ந்து அவர்கள் ஊட்டியில் இருந்து சொந்த ஊர் நோக்கி காரில் மைசூரு நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் செல்போனில் கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி அது காட்டிய வழியை நோக்கி சென்றனர். மேல்கூடலூரை கடந்து வந்தபோது கூடலூர் அரசு தலைமை தபால் நிலையம் வழியாக சாலையில் செல்லும்படி கூகுள் மேப் வழிகாட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து ஹெல்த் கேம்ப் பகுதியில் சென்றபோது இடதுபுறம் உள்ள சாலையில் திரும்புமாறு வழிகாட்டியுள்ளது.


அதன்படி கார் டிரைவரும், வாகனத்தை மிதமான வேகத்தில் ஓட்டி திருப்பினார். ஆனால் அங்கு சாலை இல்லை. சாலையில் இருந்து ஹெல்த்கேம்ப் பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகளால் ஆன நடைபாதை என்பது தெரியவந்தது. இதனை சற்றும் எதிர்பாராத காரை ஓட்டிய டிரைவர் மற்றும் சுற்றுலா பயணிகள் காரை திருப்பி எடுத்து செல்ல முடியாமல் திணறினர்.


தகவல் அறிந்த கூடலூர் போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதியினர் உதவியுடன் நடைபாதையில் நுழைந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி காரை திருப்பாமல் நடைபாதையின் முடிவு வரை ஓட்டி கொண்டு வந்து, பின்னர் ஹாலோ பிளாக் கல்லை நடைபாதையில் அடுக்கி வைத்து மெதுவாக இயக்கி தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் கூகுள் மேப் செயலி காட்டிய தவறான வழியை பார்த்து நடைபாதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.


இதையடுத்து சுற்றுலா பயணிகள் தங்களது காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் கூடலூரில் இருந்து மைசூரு மற்றும் கேரளாவுக்கு செல்லும் சாலை குறித்து தவறுதலாக கூகுள் மேப்பில் இருக்கும் வரைபடத்தை திருத்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement