Ad Code

Responsive Advertisement

"கேப்டன் மில்லர்" படம் எப்படி இருக்கு? இதோ திரைவிமர்சனம்

 



நடிகர்கள் : தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், நிவேதா சதீஷ், வினோத் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் பலர்.


இயக்கம் : அருண் மாதேஸ்வரன்

தயாரிப்பு : சத்ய ஜோதி பிலிம்ஸ்


'ராக்கி', 'சாணி காயிதம்' என தான் இயக்கிய இரண்டு திரைப்படங்களிலும் அதீத வன்முறையை காட்சிப்படுத்தி.. வன்முறை மீதான தன்னுடைய திரை காதலை பெரு விருப்பத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திலும் மூன்றாவது முறையாக கையாண்டிருக்கிறார். இது ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறதா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.


தந்தையை இழந்த அனலீசன் (தனுஷ்) தன் தாயையும் கலவரம் ஒன்றில் பறிகொடுக்கிறார். இவருடைய மூத்த சகோதரர் செங்கோலன் (சிவ ராஜ்குமார்) ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சிகர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 


இந்நிலையில் தனுஷ் தான் வாழும் ஊரில் சுயமரியாதைக்கு மதிப்பில்லை என்பதால், மரியாதை தரும் என எண்ணி ஆங்கிலேயரின் காவல் படையில் சேர்கிறார். தன்னை கேப்டன் மில்லர் என்று கூறிக் கொள்கிறார். 


அந்த  படையில் சேர்ந்த தனுஷ், சொந்த ஊர் மக்களையே கலவரத்தின் போது கொல்ல நேர்கிறது. இதனால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு, ஆங்கிலேய காவல் படையிலிருந்து விலகி, மீண்டும் ஊருக்கு திரும்புகிறார். ஆனால் ஊர் மக்கள் 'துரோகி' என்றும், 'கொலைகாரன்' என்றும் அவன் மீது பழி பத்தி ஊரை விட்டு துரத்துகிறார்கள்.


வாழ்க்கைக்கான இலக்கில்லாமல் பயணிக்கும் தனுஷ் கொள்ளை கும்பல் ஒன்றுடன் சூழல் காரணமாக இணைகிறார். அவர் ஆங்கிலேயர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பின் காரணமாக அவர்களை அழிக்க துடிக்கிறார்.  


தான் சூட்டிக்கொண்ட கேப்டன் மில்லர் எனும் பெயரில் உள்ள நிஜமான 'கேப்டன்' என்பதை என்னவென உணர்ந்து, அந்த வழியில் அவர் பயணிக்கிறார். கொள்ளைக்காரன், கொலைகாரன், துரோகி என ஊர் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட தனுஷ்.. தன் மீதான குற்றத்தை வன்முறையால் எப்படி அழிக்கிறார்? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை.


துடிப்புள்ள இளம் வாலிபனாக அறிமுகமாகி பார்த்தவுடன் காதலில் விழுவதும், பின் போராளியாக சிலிர்த்து எழுந்து ஆங்கிலேயரை துவம்சம் செய்வது என தன் கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறார் தனுஷ்.


ஊர் மக்கள் கட்டி எழுப்பிய ஆலயத்திற்குள் அவர்களை அனுமாதிக்காத அரசர்.. அந்த நிலத்தை கையகப்படுத்த நினைக்கும் ஆங்கிலேய அரசாங்கம்.. என இரு பக்கத்தில் இருந்தும் ஊர் மக்கள் சொல்லொணாத் துயரத்தை சந்திக்கிறார்கள்.  இதற்கு தனுஷ் வன்முறை மூலம் விடை கொடுப்பது ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது.


'ஏன் ஒரு கெட்டவன இன்னொரு கெட்டவன் கொல்லக் கூடாதா..?', 'முன்னாடி அவனுக்கு அடிமையாக இருந்தோம். இப்போ வெள்ளைக்காரனுக்கு அடிமையா இருக்கோம்.',  'நம்மள கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா..', 'நீ யாரு? உனக்கு என்ன வேணும்கிறத பொறுத்து.. நான் யாருங்கிறது மாறும்..' என தனுஷ் பேசும் வசனங்களிலிருந்து இந்த படம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும், அரசர்களின் சாதிய ஒடுக்கு முறை குறித்தும் பேசி.. கவனத்தைக் கவர்கிறது. 


அது மட்டுமின்றி 'கீழ் சாதி, மேல் சாதி, குடிசை, மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமைதான். நம்ம சொல்றதை கேட்கணும்னா நமக்கு அதிகாரம் இருக்கணும்'.. என மெத்தபடித்த அரச வம்சத்து பெண்மணியின் ஊடாக பேசும் வசனமும், பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் இருக்கிறது. இதற்காக வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு பூங்கொத்தை கொடுத்து கைகுலுக்கி பாராட்டலாம்.


தனுசுக்கு மூத்த சகோதரராக நடித்திருக்கும் சிவராஜ் குமார் ஏற்கனவே 'ஜெயிலர்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஓரளவு நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. 


அதிலும் அவர் உச்சகட்ட காட்சியில் கையில் ஆயுதத்தை எடுத்து வரும் தருணங்கள் மாஸ். கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் சந்தீப் கிஷன் இறுதிக்காட்சியில் தோன்றுவதும் சுப்பர்.  நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா அருள் மோகனின் கையிலும் துப்பாக்கியை குறித்து எக்சன் காட்சிகளில் நடிக்க வைத்திருப்பது பொருத்தமாகவே உள்ளது.


இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஆறு அத்தியாயங்களாக இப்படத்தின் கதையை சொல்லி இருப்பது கவனத்தை கவர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் கோணத்திலிருந்து சுதந்திர போராட்ட காலகட்டம், ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், இந்திய அரசர்களின் ஆதிக்கம்.. ஆகியவற்றை காட்சிப்படுத்தி இருப்பது, தன் விருப்பத்திற்குரிய வன்முறையை திரையில் கடத்தி அதனை நியாயப்படுத்தி இருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு ஸ்பெஷலாக பாராட்டலாம். இருப்பினும் அடுத்த படைப்பிலாவது வன்முறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோரை கடந்து படத்தில் நடித்திருக்கும் இளங்கோ குமரவேல், காளி வெங்கட், வினோத் கிஷன், ஜெயபிரகாஷ், ஜான் கொக்கன் ஆகியோர்களும் ரசிகர்களின் கவனத்தை தங்களது நடிப்பால் கவர்கிறார்கள்.


தனுசுக்கு இணையாக இந்த திரைப்படத்தினை தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கடுமையாக உழைத்து படத்தை மிளிர செய்கிறார்.  சுதந்திர போராட்ட காலகட்டம் என்பதால் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நூனியும் தன்னுடைய பங்களிப்பையும் நேர்த்தியாக வழங்கி ரசிகர்களின் மனதில் பதிகிறார்.


கேப்டன் மில்லர் - தனுஷின் மேஜிக்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement