Ad Code

Responsive Advertisement

ஜெயலலிதாவை மனம் திறந்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 



தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அதன் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-


இசைக்கும் என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதில் மட்டுமல்ல, பாட்டு பாடுவதிலும் வல்லவர்.


அதே போல்தான் தலைவர் கலைஞரும், கவிதைகள் மட்டுமல்ல, நிறைய சினிமா பாடல்கள் கூட எழுதி இருக்கிறார். அவர் பாட்டு பாடியது இல்லையே தவிர, எல்லா இசை நுணுக்கங்களும் அவருக்கு நல்லா தெரியும்.


இதையும் படியுங்கள்: கருணாநிதியை போல் இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மு.க.ஸ்டாலின்

இசையை கேட்ட உடனேயே அதில் சரி எது? தவறு எது? என்று சொல்லி விடுவார். அந்த அளவுக்கு வல்லமை பெற்றவர் அவர்.


விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே... உள்ளிட்ட பாடல்களை பாடியது என்னுடைய மாமா தமிழ் இசை சித்தர் சிதம்பரம் ஜெயராமன்.


அந்த வகையில் எனக்கு இசையோடு நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக் கழகத்துக்குதான் உண்டு.


முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியில் செயல்படும் பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக்கழகம் உள்ளது. அதை விட சிறப்பு என்ன என்றால், இந்த பல்கலைக்கழகத்துக்குதான் மாநிலத்தை ஆளுகிற முதலமைச்சரே வேந்தராக இருக்கிற உரிமை இருக்கிறது.


நான் அரசியல் பேசவில்லை. யதார்த்தத்தை பேசுகிறேன். இப்படி முதலமைச்சர்களே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும். வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதோட நோக்கமே சிதைந்து போய் விடும் என்று நினைத்துதான் 2013-ம் ஆண்டே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் முதலமைச்சர்தான் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம். நானும் மனமுவந்து பாராட்டுகிறேன்.


இவ்வாறு அவர் பேசினார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement