கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து நாளை முதல் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும், ரூ.1000 பெற தகுதியானவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்திருந்தது. அதில், தகுதியுள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ரூ.1000 உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்து, அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பிய சுமார் 56.6 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு, ‘உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணி நாளை (18ம் தேதி) முதல் தொடங்க உள்ளது.
மேலும், பணம் கிடைக்காத மகளிர் யாராவது அதிகாரிகளிடம் வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தனியாக இதற்கென அலுவலர்களை அமர வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, ‘நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்பதை சொல்லி அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஏற்கப்படாதவர்களுக்கு நாளை முதல் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், எஸ்எம்எஸ் பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராக செயல்படுவார்.
இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தீர்வு செய்ய கள ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினை பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
0 Comments