தமிழகத்தில் 96 சதவீத இந்துக்களுக்கு கல்வியை மறுத்ததுதான் சனாதனம் என்று சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: "சனாதனம் என்றால் 4% மக்களுக்கு கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-ல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லோரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம். 1795-ல் எல்லோரும் நிலம் வாங்கலாம் என்ற சட்டம் வராமல் போயிருந்தால், நாம் தற்போது கூடி இருக்கும் சேவியர் கல்லூரிக்கு, சேவியர் பள்ளிக்கு இந்த இடம் கிடைத்திருக்காது.
111 ஆண்டுகளுக்கு முன்னால் 1912-ஐ எடுத்துக்கொண்டால், அப்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசாவின் ஒரு பகுதி ஆகியவை உள்ளடக்கிய பகுதியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என பல்வேறு மொழிகளை பேசுகிறவர்கள் இருந்தார்கள். அவர்களில் பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர் 6% பட்டம் பெற்றிருந்தார்கள். இதுதான் அன்றைய கல்வி முறை; இதுதான் அன்றைய சமூக நிலை.
125 ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் இருந்து படிப்பதற்காக சென்னை செல்வதாக இருந்தால், அங்கே இருந்த மைசூர் கபே என்ற விடுதியில் உணவருந்த, தங்க அனுமதி கிடையாது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு விடுதி தேவைப்பட்டது. அந்த 4 சதவீதத்தைத் தவிர்த்துப் பார்த்தால் மீதமுள்ள 96 சதவீதத்தினரும் இந்துக்கள்தான். அவர்களுக்குத்தான் கல்வி மறுக்கப்பட்டது; விடுதி மறுக்கப்பட்டது; விடுதியில் சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. இத்தகைய காலகட்டத்தில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஒய்எம்சிஏ என்ற அமைப்பு சென்னையின் பல இடங்களில் விடுதிகளை ஆரம்பித்தது. அதன்மூலம்தான் மாணவர்களுக்கு விடுதி கிடைத்தது.
ஐயா வைகுண்டரின் கொள்கையை தற்போது சிலர் சனாதனம் என்று சொல்கின்றனர். சனாதனத்தை எதிர்த்து, சாதியை எதிர்த்து, அடக்குமுறைகளை எதிர்த்து 200 ஆண்டுகளுக்கு முன் குரல் கொடுத்தவர் ஐயா வைகுண்டர். அவரது இயற்பெயர் முடிசூடும் பெருமாள். இழிகுலத்தில் பிறந்த நீ எப்படி முடிசூடும் பெருமாள் என பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று கூறி அவருக்கு முத்துக்குட்டி என்ற பெயர் வைத்தவர் அன்றைய திருவாங்கூர் மகாராஜா. அந்த முத்துக்குட்டிதான் திருச்செந்தூர் கடற்கரையில் ஜோதியாக வந்தார், ஐயா வைகுண்டரானார் என்பது வரலாறு.
எல்லோரும் சமம் என சொன்னவர் ஐயா வைகுண்டர். உருவ வழிபாடு கூடாது என அவர் கூறினார். ஏனெனில், உருவ வழிபாடு இருந்தால் அந்த 4 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள் பூஜை செய்ய வந்துவிடுவார்கள் என்பதால் அது தேவையில்லை எனக் கூறினார். உன் மனசாட்சிதான் உனக்குக் கடவுள் என கூறியவர் ஐயா வைகுண்டர். அவர் ஒரு இந்து. அவரது உறவினர்தான் நாராயண குரு. அவர் வைக்கத்தில் உள்ள சோமநாதர் ஆலய தெருவில் நடந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கோயிலுக்குள் அல்ல, தெருவில்கூட நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. அதை எதிர்த்து பெரியார், காமராஜர் போன்றோர் போராடித்தான் அவர் அந்த தெருவில் நடமாட வைத்தார்கள் என்றால், எவ்வளவு அடக்குமுறை இருந்தது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மத போதகர்கள் அனைவருக்காகவும் சேவை செய்ய வந்ததன் பயன்தான் இன்று தமிழ்நாடு கல்வியிலும், பொருளாதரத்திலும், வளர்ச்சியிலும் முன்னேறி இருக்கிறது" என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.
1 Comments
போகிற போக்கில் பல பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார். அவருக்கு ஹிந்துக்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. அவர் ஒரு மதம் மாறிய கிறித்தவர் என நினைக்கின்றேன்.
ReplyDelete