Ad Code

Responsive Advertisement

தலைமை ஆசிரியர் கைது

 

மேட்டூர் அருகே பள்ளி மாணவியரை மசாஜ் செய்து விடச் சொல்லி, டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கருங்கல்லூரில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 


இங்கு சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 144 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராஜா என்பவர் உள்ளார். இவர் 5ம் வகுப்பு பயிலும் மாணவிகளை, தனது அறைக்கு அழைத்து கை -கால்களை பிடித்து விடுமாறும், மசாஜ் செய்து விடும்படியும் கூறி டார்ச்சர் செய்து வருவதாக புகார் எழுந்தது. மேலும், மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.


இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், நேற்று பள்ளிக்கு திரண்டு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், தாசில்தார் முத்துராஜா மற்றும் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர், பள்ளிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமாதானம் அடையாத பெற்றோர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இப்போராட்டத்தால் மேட்டூர் -மைசூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் தாக்கக்கூடும் என்பதால், தலைமை ஆசிரியருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, சிலர் திடீரென கற்கள் மற்றும் செருப்புடன் ஆவேசமாக தலைமை ஆசிரியர் இருந்த அறையை நோக்கி பாய்ந்தனர். கல்வீச்சிலும் ஈடுபட்டனர். போலீசார் உடனடியாக தலைமை ஆசிரியரை ஒரு அறையில் வைத்து பூட்டினர்.


இதையடுத்து, அப்பகுதியில் டிஎஸ்பி மரியமுத்து தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து, மேட்டூர் மகளிர் காவல்நிலையத்திற்கு தலைமை ஆசிரியர் ராஜா அழைத்துச் செல்லப்பட்டார். 


விசாரணையில், பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியைகளிடமும் அவர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமை ஆசிரியர் ராஜாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement