எதை சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல் போலவும் எதுக்களிப்பது போலவும் இருக்கிறது. குறிப்பாக கிழங்கு வகை உணவுகளை சாப்பிட்டால் அன்றிரவு துாங்கமுடியாத அளவுக்கு நெஞ்செரிச்சல் வருகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா…
-- சுந்தரமூர்த்தி, மதுரை
ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தாலும் நெஞ்செரிச்சல் வரலாம். அதை அலட்சியம் செய்யக்கூடாது. முதலில் ரத்தஅழுத்தம் சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். ரத்தசோகை இருந்தாலும் ஜீரணசக்தி குறைந்து நெஞ்செரிச்சல் வரலாம். ரத்தசோகையை சரிசெய்ய வேண்டும். காலை, இரவு உணவு சாப்பிடுவதற்கு முன் சிறிய ஸ்பூன் அளவு திரிபலா சூரண பவுடரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம். இதனால் நெஞ்செரிச்சல் பிரச்னை குறையும். உணவு சாப்பிட்ட பின் ஏலாதி மாத்திரை காலை, இரவு சாப்பிட வேண்டும். மாதுளை மணப்பாகு டானிக்கை காலை, இரவு 10 மில்லி அளவு சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் வயிற்றுப்புண், வாயுத்தொல்லை குறைந்து நெஞ்செரிச்சல் பிரச்னை சரியாகும். உணவைப் பொறுத்தவரை அதிக உப்பு, காரம், புளிப்பை தவிர்ப்பது நல்லது.
-டாக்டர் விமலாமதுரை கலெக்டர் அலுவலக சித்தா பிரிவு
டூவீலர் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி ஏற்படுவது ஏன்.
- ஏ. தண்டபாணிவத்தலக்குண்டு
நாம் ஓட்டுகின்ற டூவீலர் பின் சக்கர ஷாக் அப்சார்பர் எனப்படும் ஸ்பிரிங் ஆக் ஷன் சரியாக இருக்க வேண்டும். அது நல்ல முறையில் இயங்கினால் முதுகுத்தண்டு வடத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் மேடு பள்ளங்களில் பொறுமையாக வாகனங்களை செலுத்த வேண்டும். தடதடவென்று அதிவேகத்தில் கடப்பதும் முதுகுத்தண்டை பதம் பார்க்கும். முதுகு வலி இருப்பவர்கள் குனிந்து நிமிர்வது, இரு கைகளையும் இடுப்பில் வைத்து நாற்காலி மேல் ஒரு காலை நீட்டி குனிதல் போன்ற எளிமையான பயிற்சிகளை செய்தால் முதுகு வலி படிப்படியாக குறையும்.
- டாக்டர் எஸ். சிவாபிசியோதெரபிஸ்ட்வத்தலக்குண்டு
டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன, வராமல் தடுப்பது, வந்த பின் சரி செய்வது எப்படி.
-- -கே.கஸ்துாரி போடி
திறந்த வெளியில் தேங்கிய நல்ல தண்ணீர், தேவையில்லாத பொருட்களில் தேங்கும் மழை நீரில் ஏ.டி.எஸ்., கொசு உற்பத்தியாகி கடிப்பதன் மூலம் உடல்வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுவலி, தலைவலி ஏற்படும். இவை டெங்கு அறிகுறியாகும். டெங்கு அறிகுறி ஏற்பட்டால் பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிட வேண்டும். உப்பு கரைசல் நீரை குடிக்க வேண்டும். காய்ச்சல், உடல் வலி என்பதற்காக வேறு மாத்திரைகள் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் இரத்தப்போக்கு ஏற்பட்டு சில நேரங்களில் இறக்க நேரிடலாம். சாதாரணமாக இருந்தால் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சல் வந்து 3வது நாளில் தொடர் வாந்தி, வயிற்று வலி, சிறுநீரில் ரத்தம் வருதல், மயக்கம், கை, கால்களில் பொரி, பொரியாக வந்தால் டெங்கு காய்ச்சல் அதிகம் ஆனதற்கான அறிகுறியாகும். இப்படி இருந்தால் வீட்டில் இருந்து சிகிச்சை பெற கூடாது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- -டாக்டர்.எஸ்.ரவிந்திரநாத்
தலைமை மருத்துவ அதிகாரி அரசு மருத்துவமனை, போடி
எனக்கு வயது 45 ஆகிறது. முழங்கால் வலி அதிகமாக உள்ளது. இவற்றை எப்படி சரிசெய்வது.
-எஸ். ராஜா, ராமநாதபுரம்.
மூட்டு வலி வருவதற்கு பெரும்பாலான காரணங்கள் இருந்தாலும், நாளுக்கு நாள் நடப்பது குறைந்து வருவதே முக்கிய காரணம். அதிக எடையால், அதிக நடையால் மூட்டு தேய்மானம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வலி மாத்திரை வாங்கி உட்கொள்ள கூடாது. முடிந்த அளவு தைலம் மூலம் மூட்டு வலியைக் குறைக்க முயற்சிக்கவும். சித்த மருத்துவத்தில் குந்திரிகம் தைலம், கற்பூராதி தைலம் முழங்கால் வலிக்கு பயன்படுத்தலாம். காலையும் மாலையும் வென்னீர் ஒத்தடம் கொடுக்கலாம். அமுக்கரா சூரணம், சங்கு பஸ்பம் மாத்திரை உட்கொள்ளலாம். பால், மீன், கீரை, உலர்ந்த பழங்கள், எள் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
-டாக்டர் புகழேந்திசித்த மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைராமநாதபுரம்
குழந்தைகளுக்கு சீசன் மாறுவதால் இருமல், தொண்டை வலி, காய்ச்சல் பரவுகிறது. தடுக்கும் முறைகள் என்னென்ன
--எம்.ராதாகிருஷ்ணன் காரைக்குடி
காய்ச்சல் உள்ள குழந்தையின் தும்மல், இருமலால் பிற குழந்தைகளுக்கும் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பொதுவாக தாய்ப்பால் முழுமையாக எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கும். சுத்தமான குடிநீரையும், சுட வைத்து வடிகட்டிய நீரையும் கொடுக்க வேண்டும். குளிர்பானங்கள், கிரீம், பிஸ்கட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இருமல் தொண்டை வலி காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்த்தால் பரவுவதை தவிர்க்க முடியும்.
- --டாக்டர், செ. வெங்கடேசன் குழந்தைகள் நல மருத்துவர் காரைக்குடி
மழை காலங்களில் உடல் நலனை பராமரிப்பது எப்படி
எஸ்.கலா, திருப்புத்துார்.
மழை,குளிர்காலங்களில் பொதுவாக உடல் மட்டுமல்ல மனதும் சோர்வடைவது இயல்பானது. அதனால் வெளியில் நடைபயிற்சி செல்ல முடியாவிட்டாலும்,வீட்டினுள் வாரத்தில் 5 நாட்கள் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி,நடைபயிற்சி செய்யலாம். காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளதால் நோய் எதிர்ப்புச்சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி உள்ள எலுமிச்சை பழச்சாறு,காய்கறி,பழங்கள் சாப்பிடலாம். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து உணவு பொருட்களை எடுத்தவுடன் பயன்படுத்தக் கூடாது. தயிர்,மோர்,பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஜலதோஷம், இருமல் தவிர்க்க சுத்தமான சூழலை உருவாக்கி கொள்ள வேண்டும். குடிநீரை சுட வைத்து குடிப்பது நல்லது.
-டாக்டர் மதுமதி சண்முகம் மதுரை
0 Comments