அரசு பள்ளி மாணவர்களின் கண் பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உடல்நலன் சார்ந்த பிரச்னைகளை, இளம் வயதில் கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனர் ஆர்த்தி, பள்ளி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு அருகில் அல்லது தொலைவில் உள்ள பொருட்களை பார்ப்பதில் குறைபாடு உள்ளதா; கண்கள் சிவந்துள்ளதா; புத்தக வாசிப்பில் வரிகளை தவற விடுகின்றனரா; மாறுகண் குறைபாடு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
மாணவர்களின் இடுப்பு நீளத்தை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் உயரம், எடையையும் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் தோள்பட்டை, கால் உயரத்தையும் கணக்கிட வேண்டும்.
தலை சிறியதாகவோ, பெரியதாகவோ உள்ளதா; முகத்தில் அசாதாரண மாறுதல்கள் உள்ளனவா; மூக்கு சப்பையாகவோ, வளைந்தோ உள்ளதா; பற்களில் பழுப்பு நிற கறை உள்ளதா, பாதங்கள் வளைந்துள்ளதா என, 42 வகை குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தி, அவற்றை செயலியில் பதிய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments