Ad Code

Responsive Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது வழக்கு - மாறுபட்ட தீர்ப்பு அறிவிப்பு

 




அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.


நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பில்,”அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்ட போது சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. ஆகவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். எனவே நீதிமன்ற காவலில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிடப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தார்..


நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில்,”அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி நீதிபதி பரத சக்கரவர்த்தி மனுவை தள்ளுபடி செய்தார்.மேலும் நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பில்,”காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம். மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கலாம். சிகிச்சை முடிந்த பின் சிறை மாற்றம் அல்லது அரசு மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.அதே நேரம் சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது,”இவ்வாறு கூறினார்.


3வது நீதிபதிக்கு பரிந்துரை


2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை அடுத்து ஆட்கொணர்வு வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவிடப்பட்டது. 3வது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் மூலம் மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்படும். அவர் அளிக்கும் தீர்ப்பே மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பாக இருக்கும்.


வழக்கின் பின்னணி


தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்த 14ம்தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது இதய நாளங்களில் 3 அடைப்புகள் இருந்தது தெரிய வந்தது. பிறகு செந்தில் பாலாஜி மனைவி கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.


வழக்கின் முக்கிய வாதங்கள்


மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.இளங்கோ : கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இதன் மூலம் சட்டவிரோதமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது


அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா : நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை. ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement