மாதவிடாயின்போது
_ குளிக்கக் கூடாது,
_ சில உணவுப் பொருள்களை சாப்பிடக் கூடாது,
_ வலி நிவாரணிகளைப் பயன்படுத்தக் கூடாது,
_ உடற்பயிற்சி செய்யக் கூடாது
என்று பொதுவாகக் கூறுகின்றனரே, இவையெல்லாம் உண்மைதானா?
மாதவிடாய் குறித்த இத்தகைய தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மையைப் பற்றிப் பதிலளிக்கிறார், தில்லியில் மேக்ஸ் பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குநரும் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவருமான டாக்டர் எஸ்.என். பாசு.
1. சில உணவுகளை சாப்பிடும்போது மாதவிடாய் வலி குணமாகலாம் அல்லது வலி இன்னும் மோசமாகலாம்.
சீரான உணவை எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்றாலும், மாதவிடாய் வலியை குணப்படுத்தும் அல்லது வலியை மோசமாக்கும் உணவுகள் என எதுவும் இல்லை. இருப்பினும், சில பெண்கள் காஃபின், ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை உட்கொள்வதைக் குறைப்பது மாதவிடாய் அறிகுறிகளைப் போக்க உதவும்.
2. மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பற்றது, அது சிக்கல்களை ஏற்படுத்துகிறது, எனவே, அந்த நேரத்தில் உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்.
உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது, பயனுள்ளது. உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலமும், இயற்கையான வலி நிவாரணிகளாக செயல்படும் எண்டோர்பின்களை வெளியிடுவதன் மூலமும் மாதவிடாய் பிடிப்பை (menstrual cramps) சரிசெய்கிறது. எனினும், உங்களின் உடல்நிலை அறிந்து உடற்பயிற்சியின் தீவிரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் நேரத்தில் நடைபயிற்சி, யோகா, நீச்சல் போன்ற குறைவான தாக்கம் கொண்ட செயல்பாடுகளை தேர்வு செய்வது நல்லது.
3. மாதவிடாயின்போது குளிப்பது தீங்கு விளைவிக்கும் அல்லது மாதவிடாய் ரத்தப்போக்கை அதிகப்படுத்தும்
இந்த நம்பிக்கை ஆதாரமற்றது. மாதவிடாயின்போது குளிப்பது அல்லது நீச்சல் செய்வது எந்த எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாது. உண்மையில் இந்த நேரத்தில் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது, புத்துணர்ச்சியுடன் இருப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வை அளிக்கும்.
4. மாதவிடாயின்போது உடற்பயிற்சி செய்வது அதிக ரத்தப்போக்கினை ஏற்படுத்தும்
மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது ரத்தப்போக்கின் அளவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது. மாதவிடாய் ரத்தப்போக்கு என்பது ஹார்மோன் காரணிகள் மற்றும் கருப்பைச் சவ்வு உதிர்தல் ஆகியவற்றைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது. மாதவிடாய் ரத்தப்போக்கில் மாற்றங்கள் தெரிந்தால் சுகாதார நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது.
5. மாதவிடாய் வலியை சரிசெய்ய வலி நிவாரணிகள் மட்டுமே சிறந்த வழி
மாதவிடாயின்போது ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs) போன்ற வலி நிவாரணிகள்(Over-the-counter pain relievers) பல பெண்களுக்கு நிவாரணம் அளிக்கும். இருப்பினும் அது மட்டும் வழி அல்ல. வெப்ப சிகிச்சை செய்யலாம். வெப்பமூட்டும் 'ஹீட்டிங் பேடு' அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, தசைகளை தளர்த்தவும் வலியைக் குறைக்கவும் உதவும். கூடுதலாக, கருத்தடை மாத்திரைகள் போன்ற ஹார்மோன் கருத்தடை மருந்துகள், ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தி மாதவிடாய் வலியைக் குறைக்கும். இதற்கு ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது தீர்வு கிடைக்க உதவும்.
6. மாதவிடாயின்போது உடற்பயிற்சி செய்வது கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கிறது
மிதமான உடற்பயிற்சி செய்வது பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் அல்லது கருவுறுதலில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாது. வழக்கமான உடற்பயிற்சி செய்வது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பலனளிக்கும்.
அதேநேரத்தில், தீவிர உடற்பயிற்சி செய்வதனால் ஏற்படும் அதிக எடை இழப்பு, ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து கருவுறுதலைப் பாதிக்கும். வழக்கமான சமநிலையான உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்வது ஒட்டுமொத்த வாழ்வுக்கும் நல்லது.
0 Comments