வீட்டின் முகவரி தெரியாமல் பைக்கில் சுற்றிய முதியவரை ரோந்து போலீசார் பத்திரமாக மீட்டனர். வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பியபோது திடீரென ஏற்பட்ட ஞாபக மறதியால் வீட்டின் முகவரியை கண்டுபிடிக்க முடியாமல் சென்னையில் விடிய, விடிய சுற்றிய முதியவரை ரோந்து போலீசார் பத்திரமாக மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை கொளத்தூர் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடம்(65). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து பைக்கில் அங்குள்ள கடைக்கு சென்றார். இந்நிலையில், திடீரென அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டது.
இதனால் வீட்டுக்கு செல்வதற்கு வழி தெரியாமல் தவித்த அவர், கொளத்தூர், அண்ணாநகர், அமைந்தகரை மற்றும் அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பைக்கிலேயே சுற்றி, சுற்றி வந்துள்ளார். நள்ளிரவு 1.30 மணி அளவில், அரும்பாக்கம் 100 அடி சாலையில் வந்தார்.
அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார், முதியவரை அழைத்து விசாரித்துள்ளார். அதற்கு முதியவர், ‘‘எனது வீட்டுக்கு செல்வதற்கு வழி தெரியாமல் இரவு முழுவதும் சுற்றி வருகிறேன்.’’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, முதியவரின் வீட்டு முகவரி மற்றும் செல்போன் நம்பரை போலீசார் கண்டுபிடித்து, அவரது குடும்பத்தாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து, வரவழைத்தனர். பின்னர், அவர்களிடம் முதியவரை பத்திரமாக ஒப்படைத்தனர். இதுபற்றி முதியவரின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் மதியம் கடைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து பைக்கில் சென்றவர் காணவில்லை என்றதும் வெகுநேரமாக தேடி பார்த்தோம்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். அதற்குள் போலீசார் கண்டுபிடித்து பத்திரமாக ஒப்படைத்துவிட்டனர். இதற்காக போலீசாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.’’ என கண்ணீர் மல்க கூறினர்.
0 Comments