அரசியல் வட்டாரத்தில் அடைமொழியை அடித்தட்டு மக்கள்வரை கொண்டுபோய்ச் சேர்த்தது திராவிட இயக்கம்தான். அழகிரி என்றால் பலருக்கும் தெரியாது; 'அஞ்சா நெஞ்சன்' என்றால் உடனே அழகிரியா? அனைவரும் கேட்டுவிடுவார்கள்.
அண்ணாதுரை என்றால், அது அழகில்லை; 'அறிஞர் அண்ணா' என்றால்தான் அதற்குத் தனிச் சுவை. இப்படித்தான் 'நடிகவேள்' ஆனார் எம்.ஆர்.ராதா. 'நடிப்பிசைப் புலவர்' ஆனார் கே.ஆர். ராமசாமி.
'புரட்சி நடிகர்' என்றால் அது எம்.ஜி.ஆர். 'நடிகர் திலகம்' என்றால் அது சிவாஜி கணேசன். 'இலட்சிய நடிகர்' என்றால் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
இப்படித்தான் மு.கருணாநிதி 'கலைஞர்' மு. கருணாநிதி ஆனார். இவருக்குக் கலைஞர் எனப் பட்டம் கொடுத்தது யார்? எனக் கேட்டால் பலரும் உடனே சொல்லும் பதில் என்ன தெரியுமா?
திராவிட இயக்கத் தலைவர்கள் பலருமேகூட இப்படித்தான் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது முழு உண்மை இல்லை. அவருக்கு கலைஞர் என்ற அடைமொழி வந்ததே ஓர் அழகான நிகழ்வு. தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறந்த படைப்பாக ஐம்பெரும் காப்பியங்களைக் கூறுவர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும்தான் அவை.
இதில் முதல் மூன்று காப்பியங்கள் முழுமையாகக் கிடைத்துள்ளன. ஆனால், வளையாபதியும் குண்டலகேசியும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஓலைகளில் எழுதப்பட்ட அந்தக் காப்பியங்கள் கால வெள்ளத்தில் அழிந்துபோய்விட்டன. இதைக் கொண்டு ஒரு நாடகத்தை எழுதினார் மு.கருணாநிதி. அதை வானொலியில் ஒலிபரப்ப அனுப்பியும் வைத்தார். ஆனால், அது ஒலிபரப்பு ஆகவில்லை.
இதையடுத்து நடிகர் எம்.ஆர்.ராதாவுக்காக 'தூக்குமேடை' நாடகத்தை எழுதினார் கருணாநிதி. இதை கோயம்புத்தூரில் வசித்த காலத்தில் எழுதத் தொடங்கினார். அதன் இறுதி வடிவம் திருவாரூரில் நிறைவு பெற்றது. கருணாநிதியின் முதல் நாடகம் 'சாந்தா என்ற பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. அடுத்து 2ஆவது நாடகம்தான் 'தூக்குமேடை'. தன் வாழ்நாளில் 15 நாடகங்கள்வரை எழுதியுள்ளார், கருணாநிதி. ஆனால், அவற்றுக்கெல்லாம் இல்லாத பெருமை 'தூக்குமேடை'க்கு உண்டு.
'பரப்பிரம்மம்' என்ற பெயரில் நாடகம் எழுதி, அதை மாநிலம் முழுவதும் அரங்கேற்றம் செய்தார். 1957ஆம் ஆண்டு, தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலப்படுத்துவதற்காக, 'உதயசூரியன்' என்ற நாடகத்தை எழுதினார்.
இப்படி நாடகத்தால் தனது இயக்கத்தை வளர்த்தவர் கருணாநிதி. நாடகம் எனும் கலைவடிவம் பற்றி கருணாநிதி ஓர் இடத்தில், "நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக் கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை. அதனால்தான் அரசியல் கருத்துகளைப் பண்பாடு கெடாமல் தரம்தாழாமல் அள்ளித் தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தைக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டேன்" என்றார்.
சரி, 'தூக்குமேடை'க்கு வருவோம். தஞ்சாவூரில் கருந்தட்டாங்குடி எனும் இடத்திலிருந்த இந்த நாடகம் கிருஷ்ணா தியேட்டரில் அரங்கேறியது.
அந்த நாடகத்திற்காக அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையில், "19.11.1947 புதன்கிழமை முதல் இரு புரட்சி நடிகர்களின் சந்திப்பு. சீர்திருத்த நாடக சக்ரவர்த்தி நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் திராவிட மறுமலர்ச்சி நாடக சபையார், தஞ்சை கொடிமரத்து மூலை, கிருஷ்ணாலீலா தியேட்டரில் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி தலைமையின் கீழ் எம்.ஆர்.ராதா, மு.கருணாநிதி நடிக்கும் 'தூக்குமேடை' என்னும் புதிய சீர்திருத்த நாடகம் நடைபெறும். கதை வசனம் திருவாரூர் மு.கருணாநிதி" என்று இருந்தது.
மேடையேற்றப்பட்ட காலத்தில் இந்நாடகம் அரசியல் அரங்குகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திராவிட இயக்க கொள்கைகளைத் தீப்பிழம்பாகக் கொப்பளித்தது. எல்லாம் சரி, 'தூக்குமேடை'க்கு தனிப் பெருமை உண்டு எனச் சொன்னோம் இல்லையா, அதற்குள் வருவோம்.
இந்த நாடகத்தினை அரங்கேற்ற எம்.ஆர்.ராதா அடித்த துண்டறிக்கையில் 'அறிஞர்' கருணாநிதி என எழுதப்பட்டிருந்ததாகவும், அதைப் பார்த்த கருணாநிதி, 'அறிஞர் என்றால் அது அண்ணாதான். ஆகவே அதைத் தூக்கிவிடுங்கள்' எனச் சொன்னதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
ஆனால், கலைஞர் என்ற பட்டம் யாரால்? எப்போது கொடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாகக் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஏ.எஸ்.பன்னீர்செல்வன், "இந்தக் கலைஞர் என்ற பட்டம் 'தூக்குமேடை' நாடக விழாவுக்குத் தலைமை தாங்கிய பட்டுக்கோட்டை அழகிரியால்தான் முதன்முதலாக வழங்கப்பட்டது. 10 ஆண்டு காலத்திற்குள் அந்தப் பட்டம் கருணாநிதியின் முதற் பெயராகிவிட்டது" எனக் கூறியுள்ளார்.
0 Comments