Ad Code

Responsive Advertisement

2 மனைவிகளிடம் பராமரிப்பு தொகை பெற்ற கணவன்: கர்நாடகா கோர்ட்டில் விநோதமான வழக்கு

 

கர்நாடகாவில் பிரிந்து சென்ற தனது 2 மனைவிகளிடம் இருந்து மாதாந்திர பராமரிப்பு தொகையாக தலா ரூ.10,000 பெற்ற கணவனை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். 


கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் பீமராயனகுடியை சேர்ந்த தரு ரத்தோட் (65) என்பவர், கடந்த 40 ஆண்டுக்கு முன் திப்பிபாய் (55) என்பவரை திருமணம் செய்து கொண்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கமலிபாய் (50) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இரு மனைவிகளிடம் இருந்தும் பிரிந்து சென்றுவிட்டார்.


திப்பிபாய் மூலம் பிறந்த மூன்று மகன்கள் மற்றும் கமலிபாயின் மூலம் பிறந்த மகன் மற்றும் மகள் ஆகிய அனைவருக்கும் திருமணம் ஆனதால், அவர்கள் செட்டில் ஆகிவிட்டனர். அதேநேரம் தரு ரத்தோட்டின் மனைவிகள் இருவரும், அப்பகுதியில் அமைந்துள்ள விவசாயக் கல்லூரியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். 


தனது வயது மூப்பின் காரணமாக பராமரிப்பின்றி இருந்த தரு ரத்தோட், தனது இரு மனைவிகளின் சம்பளம் குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டு விவசாயக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அவர்கள் திப்பிபாய், கமலிபாய் ஆகியோரின் சம்பள விவரங்களை கடிதம் மூலம் அனுப்பி வைத்தனர்.


அதில், திப்பிபாய்க்கு மாதம் ரூ.38,636 என்றும் கமலிபாய்க்கு மாதம் ரூ.36,896 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து அவர், மாதச் சம்பளம் பெற்று வரும் தனது இரு மனைவிகளிடம் இருந்து, மாதாந்திர பராமரிப்பு தொகையாக தலா ரூ.10,000 வழங்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். 


இவ்வழக்கை விசாரித்த ஷாஹாபூர் நீதிமன்றம், தரு ரத்தோட்டின் வயது முதிர்வு மற்றும் நோயைக் கருத்தில் கொண்டு, அவரது இரு மனைவிகளும் தங்களது கணவருக்கு தலா 10,000 ரூபாய் மாதாந்திர பராமரிப்பு தொகை வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.


தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற இரு மனைவிகளிடம் இருந்து மாதாந்திர பராமரிப்பு தொகையாக தலா ரூ.10,000 பெற்ற தரு ரத்தோட்டின் வழக்கின் தீர்ப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில், ஆண்களே பெண்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டிய நிலை இருக்கும் நிலையில், இந்த வழக்கில் விநோதமாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement