“குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நெடுநாட்கள் நிலுவையில் இருப்பதன் மூலம், நீட் சட்டத்தின் அடிப்படைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா?” என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பின்னர் மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "நீட் தேர்வு வேண்டாம் என்று கூறிய, கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீட் தேர்வு அறிவிக்கைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த்து
இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், "மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளதால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட்தேர்வு ரத்து சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று கூறியதைத் தொடர்ந்து இந்த வழக்கு 12 வாரம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசுன் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, "தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி, "இந்த விவகாரத்தில் வாதிட தமிழ்நாடு அரசு தயாராக வரவில்லையா? ஒவ்வொரு முறையும் ஏன் வழக்கை ஒத்திவைக்க கோருகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நெடுநாள் கிடப்பில் இருக்கிறது. நீட் சட்டத்துக்கு எதிராக கேள்வி எழுப்பக் கூடாது என்பதையே இது காட்டுகிறது.
குடியரசுத் தலைவர் தரப்பில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதன் மூலம், நீட் சட்டத்தின் அடிப்படைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். பின்னர், ஆளுநர், குடியரசுத் தலைவரைக் காரணம் கூறி வழக்கில் மீண்டும் கால அவகாசம் கோரினால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என தமிழக அரசை எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
0 Comments