சென்னையில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வீடுகளில் எத்தனை உள்ளன என்ற முறையான புள்ளி விவரம் இல்லாததால் அவற்றை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. எனவே, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்யும் புதிய திட்டம் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கால்நடை டாக்டர் கமால் உசேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக சிகிச்சை, வெறிநாய் தடுப்பூசி போன்றவை போடப்படுகிறது. திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 4 இடங்களில் இதற்கான மருத்துவமனை உள்ளது. இங்கு வெறிநாய் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 50 கட்டணம் செலுத்தி இதனை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகள் குறித்த சரியான புள்ளி விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அதனை முறைப்படுத்துவதற்காகத்தான் ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்படுகிறது.
நாய் வளர்ப்போரின் பெயர், அடையாள அட்டை, நாய் போட்டோ, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதவிர செல்லப் பிராணிகளுக்கான தனியார் கிளினிக், கடைகள் நாய் இனவிருத்தி செய்யக்கூடியவர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
அவர்களும் தங்கள் பெயர், கடை, வீடு போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக முழு விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம். ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் முறை நடைமுறைத்தப்படுத்தப்பட்டால் செல்லப்பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும். மேலும் நாய், பூனை வளர்ப்போரின் முழுமையான விவரமும் மாநகராட்சிக்கு தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments