கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் வடமாநில குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து கல்வி கற்று தருவது அரிதாகி விட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தினருடன் வசிப்பதாக தெரிகிறது. இவர்களின் குழந்தைகள் பள்ளி செல்ல இயலாத நிலையில் உள்ளனர். ஒடிசா, பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் தமிழ் வழி பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வடமாநில குழந்தைகளுக்காக பிற மொழி பாடங்களை கற்று தரும் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது.
குறிப்பாக மில், பவுண்டரி அதிகமுள்ள, வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அவர்களின் குழந்தைகளுக்கு அவர்களது தாய் மொழி பாடத்தை கற்று தரவேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. ஆனால் ஒரியா, இந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம் கற்று தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
சில பள்ளிகளில் வடமாநில குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தமிழ் மொழியில் கல்வி கற்கின்றனர். இவர்கள் மொழி பிரச்னையால் தவிப்பதாக தெரிகிறது. தமிழ் வழியில் பாடம் கற்ற குழந்தைகள் சிலர் ெசாந்த ஊர் சென்று விட்டனர். இவர்கள் மீண்டும் வடமாநில மொழிகளில் கல்வி கற்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில், வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. புலம் பெயர்ந்த இவர்களை பள்ளி கல்வித்துறையினர் முறையாக கணக்கெடுக்கவில்லை. இவர்களின் கல்விக்கான திட்டங்களை அலட்சியப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி கல்வித்துறையினர் கூறுகையில், ‘‘ புலம்பெயர்ந்து தமிழகம் வந்து தொழிலாளர்களாக வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்காக அவர்களது தாய் மொழியில் பாட புத்தகம் அச்சடித்து கல்வி கற்று தரும் திட்டம் கடந்த 2011ம் ஆண்டில் துவங்கியது. கடந்த ஆண்டில் மாநில அளவில் ஒடியா மொழி பேசும் மாணவ மாணவிகள், இந்தி பேசும் மாணவ மாணவிகளும், வங்காள மொழி பேசும் மாணவ மாணவிகள், தெலுங்கு பேசும் மாணவ மாணவிகள் என 30 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என தெரிகிறது. இதர மொழியில் படிப்பவர்களுக்கு அவர்களது மொழியில் பாட புத்தகம் வழங்கப்பட்டது. சிலர் மில் ஷெட்களில் தங்கியுள்ளனர். தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முன் வரவேண்டும்’’ என்றனர்.
0 Comments