"உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எனக்கு பெருமையாக இருக்கிறது" என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எம்எல்ஏ உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சேப்பாக்கம் உதயநிதியாக இருந்தாலும், நண்பர் உதயநிதியாக இருந்தாலும், ஒரு நண்பனாக என்னுடைய வாழ்த்துகள். அவர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது பெருமையாக இருக்கிறது.
தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்துக்கு முன்பாகவே அவர் இளைஞர் அணி செயலாளராக வரவேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் கொண்டு வரும்போது, அப்போது தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றே ஒன்றைத்தான் கூறினார். முதலில் அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, அவரது உழைப்பை முதலில் காட்டி, தன்னை நிரூபிக்கட்டும், அதன்பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். அந்த தேர்தலில் நல்லதொரு வெற்றியை நாங்கள் அடைந்தோம்.
அதேபோல், 2021-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்தோம். அப்போது அவரிடம் உங்களால் இந்த வெற்றி என்று சொன்னபோது, அவர், இந்த வெற்றி என்பது என்னால் கிடையாது. இந்த வெற்றி தலைவரால், உடன்பிறப்புகளால், பொதுமக்களால் கிடைத்த வெற்றி என்று தன்னடக்கத்தோடு சொன்னவர்.
அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எப்படி எடுக்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் தனது உழைப்பையும் செலுத்தி செய்வாரோ, அதேபோல் அவர் பொறுப்பேற்கவுள்ள துறையிலும் நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.
0 Comments