மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட விழாவில் சைகை மொழியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு தெரிவித்தார். மேலும், தமிழக அரசு தனி கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையானவற்றைச் செய்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், "முதலமைச்சர் அறிவுரைப்படி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சைகை மூலம் தமிழ் தாய் வாழ்த்து பாடியதற்கு ஒட்டு மொத்த தமிழ் சமூகம் சார்பில் நன்றி. தனி கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையானவற்றைச் செய்து வருகிறோம்.
முதலமைச்சர் வாழ்த்து செய்தியில் அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று கூறியுள்ளார். அதை சிறப்பாகச் செய்ய தான் செயல்பட்டு வருகிறோம். மாற்றுத்திறனாளிகளைப் பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். மதிப்பெண் மட்டுமே அவர்களின் திறமையை மதிப்பீடு செய்யாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமை இருக்கும்." இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments