திருப்பூர் ரயில் நிலையம் முன்பு, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற இந்தியில் எழுதிய பதாகை வைக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்து, தற்போது இங்கிருப்பவர்களுக்கே போதிய வேலை இல்லை என்ற சூழல் தொழில் துறையினர் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு, `வேலைக்கு ஆட்கள் தேவை’ என இந்தி மொழியில் பிரமாண்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியில் `வேலைக்கு ஆள் வேண்டும்’, நூற்பாலை, டையிங், காம்பேக்ட்டிங், எம்ராய்டரி, கோழிப் பண்ணை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை எனவும், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை, மாத ஊதியம் வழங்கப்படும் எனவும் தொடர்பு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பர பதாகை வைக்கப்பட்டிருப்பதை பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இது குறித்து பனியன் தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் (ஏஐடியுசி) என்.சேகர் கூறுகையில், சில நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களை மொத்தமாக வேலைக்கு சேர்த்துவிடும்போது கமிஷன் தொகை உள்ளிட்டவை வழங்குவதால், முகவர்களும் இந்த வேலையை செய்கின்றனர்.
ஏற்கனவே, வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வந்துவிட்டதால், இங்கிருப்பவர்களுக்கு வேலை இல்லை என்ற பேச்சு இருந்துவரும் நிலையில், முழுவதும் இந்தியில் வைக்கப்பட்ட பதாகை, உழைப்பை நம்பி திருப்பூர் வரும் தொழிலாளர்களிடையே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. முழுக்க இந்தியில் வைத்திருப்பதை ஏற்கமுடியாது. பதாகை வைக்க அனுமதி அளித்த ரயில்வே நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும், என்றார்.
0 Comments