தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை (டிச. 14) பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்றது. எனினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை.
திமுக அமைச்சரவை பொறுப்பேற்றபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின்னர், உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று சில அமைச்சர்கள் பேசினர். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருந்துவிட்டார்.
இந்நிலையில், திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். இதையடுத்து, அவரை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பேசி வந்தனர்.
சமீபத்தில் உதயநிதி தனது பிறந்த நாளின்போது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவரிடம் அமைச்சர் பதவி குறித்து கேட்டபோது, ‘அதை முதல்வர் தான் முடிவெடுப்பார்’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, ஆளுநர் மாளிகைக்குப் பரிந் துரைத்துள்ளார்.
இதையடுத்து, நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இது தொடர்பாக ஆளுநரின் செயலர் ஆனந்த ராவ் வி.பாட்டீல் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் பரிந்துரையின்படி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை, தமிழக அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் டிச. 14-ம் தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது" என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செய லாக்கத் துறை ஆகியவை ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் செயலராக இருந்த அபூர்வா மாற்றப்பட்டு, டெல்லியில் தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையராக இருந்த சீனியர் ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ரா செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், உதயநிதிக்கான அறை தலைமைச் செயலகத்தில் தயாராகி வருகிறது. சட்டப்பேரவைக் கட்டிடத்தின் 2-ம் தளத்தில் உள்ள அறையில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சரவை விரிவாக்கம் தவிர, சில மூத்த அமைச்சர்கள் கவனிக்கும் துறைகளும் மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
0 Comments