தமிழகம், புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழையை ஒட்டி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்' என்ற புயலாக மாறி, சென்னை -- புதுச்சேரி இடையே, இம்மாதம் 9ம் தேதி இரவில் கரையை கடந்தது.
இந்த புயல் வேலுார் மாவட்டம் வரை சென்று, அங்கு வளிமண்டல சுழற்சியாக வலுவிழந்து விட்டது.
இந்நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும், கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் 15ம் தேதி வரை மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். காலை நேரத்தில் பனி மூட்டம் நிலவும்.
நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம், 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
அரபிக்கடலில் லட்சத்தீவு, கேரள, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வரை சூறாவளி வீசும்.
எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 10 செ.மீ., மழை பெய்து உள்ளது. ஆம்பூர் 8; ஆற்காடு 7; ஆலங்காயம், சின்னக்கல்லார் 6, ஊட்டி, வாணியம்பாடி, வால்பாறையில் 5 செ.மீ., மழை பெய்து உள்ளது.
மீண்டும் புயலா?
இந்திய பெருங்கடலை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. இது படிப்படியாக வலுப்பெறலாம்; இதனால், தமிழகத்துக்கு மீண்டும் புயல் வர வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.
0 Comments