பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து வெள்ளை கத்தரிக்காய் வரத்து அதிகமாக இருப்பதால், ஒருகிலோ ரூ.10ஆக சரிந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகமாக உள்ளது. அதிலும் பல்வேறு கிராமங்களில், கத்தரிக்காய் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் தொடர்ந்து பல மாதமாக பெய்த பருவமழையையொட்டி, பல்வேறு காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினாலும், கத்தரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபட்டனர். தற்போது அவை நன்கு விளைந்துள்ளது. பல பகுதிகளில் அறுவடைசெய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுவது தொடர்ந்துள்ளது.
இன்னும் பல கிராமங்களில், அறுவடைக்கு தாயரான நிலையில் உள்ளது. இந்த ஆண்டில் விளைச்சல் வழக்கத்தைவிட அதிகரிப்பால், மார்க்கெட்டுக்கு அதன் வரத்து மேலும் அதிகரித்ததுடன் விலை சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒருகிலோ கத்தரிக்காய் ரூ.35 முதல் ரூ.40வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒருகிலோ ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.25க்கே என குறைவான விலைக்கு விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூர்களில் வெள்ளை கத்தரிக்காய் விளைச்சல் அதிகரிப்பால், அவையும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாகியுள்ளது. இதில் கடந்த சில நாட்களாக, வெள்ளை கத்தரிக்காய் வழக்கத்தைவிட வரத்து அதிகரிப்பால், விலை கடுமையாக சரிந்துள்ளது. இதில், நேற்றைய நிலவரபடி ஒருகிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.15க்கே விற்பனை செய்யப்பட்டதாகவும், பெரும்பாலும் கேரளாவுக்கே அதிகளவு அனுப்பப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
0 Comments