'என் மனைவி தினமும் என்னை அடிக்கிறார்; கத்தியால் வெட்டுகிறார்' என பிரதமர் அலுவலகத்துக்கு பெங்களூரு வாலிபர் அனுப்பிய புகார், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரைச் சேர்ந்தவர் யதுநந்தன் ஆச்சார்யா, 35. இவர், சில தினங்களுக்கு முன், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ 'டுவிட்டர்' சமூக வலைதள கணக்கிற்கு ஒரு புகார் அனுப்பியிருந்தார்.
அதில், 'என் மனைவி தினமும் என்னை அடிக்கிறார்; கத்தியால் வெட்டுகிறார். இதுதான் நீங்கள் கூறும் பெண் சக்தியா? நான் அனுபவிக்கும் கொடுமைக்காக, என் மனைவி மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது. ஏனெனில் நான் ஒரு ஆண்' என தெரிவித்துள்ளார்.
மேலும், தன் கையில் கத்தியால் வெட்டப்பட்டு ரத்தம் வழியும் புகைப்படத்தையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியுள்ளார்.
இதை பார்த்த போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, 'போலீஸ் நிலையத்துக்கு சென்று சட்டப்பூர்வமாக புகார் கொடுக்கவும். உங்கள் பிரச்னை தீர்க்கப்படும்' என, யது நந்தனுக்கு பதிலளித்துள்ளார்.
யதுநந்தன் ஆச்சார்யாவின் பதிவுக்கு பலரும், குறிப்பாக பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்
0 Comments